மோசடி வழக்கில் 'பிக் பாஸ்' தினேஷ் கைது செய்யப்பட்டாரா? உண்மை இதுதான்
செய்தி முன்னோட்டம்
விஜய் டிவியின் 'பிக் பாஸ் தமிழ் சீசன் 7' நிகழ்ச்சி போட்டியாளரும், பிரபல சின்னத்திரை நடிகருமான தினேஷ், பண மோசடி மற்றும் தாக்குதல் புகாரின் பேரில், திருநெல்வேலி மாவட்டம் பணகுடி போலீசாரால் கைது செய்யப்பட்டதை அவர் மறுத்துள்ளார். நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகேயுள்ள தண்டார்குளத்தை சேர்ந்த கருணாநிதி என்பவர் அளித்த புகாரில், நடிகர் தினேஷ், புகார் அளித்தவரின் மகளுக்கு அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி, கடந்த 2022-ஆம் ஆண்டு மூன்று லட்சம் ரூபாய் பணம் பெற்றுக் கொண்டார். பணத்தைக் கொடுத்த பின், அவர் வேலை வாங்கித் தரவில்லை என்றும், பணத்தைத் திருப்பி கேட்டபோது, தினேஷ் தொடர்ந்து ஏமாற்றி வந்ததாகவும் புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தாக்குதல்
தாக்குதல் புகாரும் அளிக்கப்பட்டுள்ளது
ஒருகட்டத்தில், பணத்தைத் திரும்பக் கேட்டுச் சென்ற கருணாநிதியை, தினேஷ் தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இந்த மோசடி மற்றும் தாக்குதல் புகாரின் அடிப்படையில், பணகுடி போலீசார் நடிகர் தினேஷை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருவதாக முன்னர் தகவல் வெளியாகி இருந்தது. எனினும், பின்னர் தினேஷ் அளித்த விளக்கத்தில், காவல்துறை விசாரணையில் ஆஜராகி விளக்கம் அளித்துவிட்டு திரும்பியதாக தெரிவித்துள்ளார். எனினும், அதை எதிர் தரப்பினர் மாற்றி கைது செய்யப்பட்டதாக பரப்பியதாக கூறினார். சின்னத்திரை நடிகர் தினேஷ், நடிகை ரச்சிதாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இருவரும் தற்போது விவாகரத்து கோரி பிரிந்து வாழ்கின்றனர். ரச்சிதா பிக் பாஸ் சீசன் 6-லும், தினேஷ் சீசன் 7-லும் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.