LOADING...
ஆடி கார் நிறுவனத்தின் புதிய சகாப்தம்; ஃபார்முலா 1 கார் இப்படித்தான் இருக்கும்
ஃபார்முலா 1இல் ஆடியின் புதிய R26 கான்செப்ட் கார் வெளியீடு

ஆடி கார் நிறுவனத்தின் புதிய சகாப்தம்; ஃபார்முலா 1 கார் இப்படித்தான் இருக்கும்

எழுதியவர் Sekar Chinnappan
Nov 13, 2025
04:25 pm

செய்தி முன்னோட்டம்

உலகப் புகழ்பெற்ற கார் தயாரிப்பு நிறுவனமான ஆடி (Audi), ஃபார்முலா 1 பந்தயத்தில் அறிமுகப்படுத்தும் தனது முதல் காரான R26 கான்செப்டின் வடிவமைப்பை வெளியிட்டுள்ளது. ஒட்டுமொத்த நிறுவனத்துக்கான புதிய பிராண்ட் அடையாளத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ள இந்தக் கார், டைட்டானியம், கார்பன் கருப்பு மற்றும் ஆடியின் புதிய சிவப்பு நிறத்தின் கலவையில், சிவப்பு நிற வட்டங்கள் பதிக்கப்பட்டு, பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டுள்ளது. ஆடி நிறுவனம் 2022 இல் சௌபர் குழுமத்தைக் (Sauber Group) கையகப்படுத்தியதன் மூலம் ஃபார்முலா 1 உலகிற்குள் நுழைந்தது. அன்றிலிருந்து, நிறுவனம் ஒரு டர்போசார்ஜ்டு 1.6-லிட்டர் V6 எஞ்சின், எரிசக்தி மீட்பு அமைப்பு (ERS) மற்றும் கியர் பாக்ஸ் போன்ற ஆற்றல் யூனிட் பாகங்களை உருவாக்குவதில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

தலைமை

ஆடி ஃபார்முலா 1 தலைமை பொறுப்பு

முன்னாள் ஃபெராரி குழுமத் தலைவர் மட்டியா பினோட்டோ மற்றும் முன்னாள் ரெட் புல் விளையாட்டு இயக்குநர் ஜொனாதன் வீட்லி ஆகியோர் இந்தக் குழுவின் தலைமைப் பொறுப்பை வகிக்கின்றனர். ஆடியின் இந்த ஃபார்முலா 1 கார், அடுத்த ஆண்டு பிப்ரவரியில் பஹ்ரைனில் நடைபெறும் சோதனையின்போது முதன்முறையாகச் செயல்திறனைக் காட்டவுள்ளது. அதைத் தொடர்ந்து, ஆஸ்திரேலியன் கிராண்ட் பிரிக்ஸ் போட்டியுடன் மார்ச் மாதம் அதிகாரப்பூர்வமாகப் பந்தயத்தில் அறிமுகமாக உள்ளது. இது குறித்துப் பேசிய ஆடி சிஇஓ ஜெர்னோட் டால்னர், "ஃபார்முலா 1இல் வெறுமனே பங்கேற்க வரவில்லை. வெற்றி பெற விரும்புகிறோம்," என்று ஆடியின் நீண்ட கால லட்சியத்தை உறுதிப்படுத்தினார். மேலும், 2030க்குள் உலகச் சாம்பியன்ஷிப் பட்டத்திற்காகப் போட்டியிடுவதே ஆடியின் பிரதான நோக்கம் என்றும் அவர் தெரிவித்தார்.