சொத்துகளைப் பணிப்பெண்ணிற்கு எழுதி வைத்துவிட்டுத் தற்கொலை; பின்னர் நடந்தது என்ன?
செய்தி முன்னோட்டம்
தெலுங்கு திரையுலகின் மூத்த நடிகரான ரங்கநாத், தனது சொத்துகளைத் தன்னைக் கவனித்து வந்த பணிப்பெண்ணிற்கு எழுதி வைத்துவிட்டுத் தனது உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம், நடந்து 10 ஆண்டுகளைக் கடந்த பின்னரும் இன்றும் பலரால் ஆச்சரியத்துடன் பேசப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டின் சென்னையில் பிறந்து, இந்திய ரயில்வேயில் டிக்கெட் பரிசோதகராகப் பணியாற்றிய திருமலா சுந்தர ஸ்ரீ ரங்கநாத், 1969-இல் புத்திமந்துடு திரைப்படத்தின் மூலம் தெலுங்குத் திரையுலகில் அறிமுகமானார். 46 ஆண்டுகாலக் கலைப்பயணத்தில் 40-க்கும் மேற்பட்ட படங்களில் கதாநாயகனாகவும், வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் 300-க்கும் மேற்பட்ட திரைப்படங்களிலும், சில சின்னத்திரை தொடர்களிலும் நடித்துப் புகழ்பெற்றார்.
தனிமையின் துயரம்
சுவரில் எழுதிய கடைசி ஆசை
கடந்த 2009-ஆம் ஆண்டில் ரங்கநாத்தின் மனைவியின் மறைவுக்குப் பிறகு மன அழுத்தத்தாலும் தனிமையினாலும் வாடி வந்த அவர், மனநல ஆலோசனைகளையும் பெற்று வந்தார்.
கடந்த 2015-ஆம் ஆண்டு டிசம்பர் 19-ஆம் தேதி, ஹைதராபாத்தில் உள்ள வீட்டில் 66-வது வயதில் அவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
உயிரிழக்கும் முன் வீட்டின் சுவரில் கருப்பு மார்க்கரால், தன்னை நீண்ட காலமாகப் பராமரித்து வந்த பணிப்பெண் மீனாட்சிக்குத் தனது பணத்தை வழங்க வேண்டும் என்றும், இறப்பு குறித்து அந்தப் பணிப்பெண்ணைத் தொந்தரவு செய்ய வேண்டாம் என்றும் எழுதி வைத்திருந்தார்.
தற்கொலை செய்துகொள்வதற்குச் சில நிமிடங்களுக்கு முன்பு எழுத்தாளர் பி. தேவதாஸ் உள்ளிட்ட தனது நெருங்கிய நண்பர்களுக்கு Goodbye என அவர் குறுந்தகவல் அனுப்பியிருந்தது விசாரணையில் தெரியவந்தது.
கடைசி ஆசை
தந்தையின் ஆசையை நிறைவேற்றிய பிள்ளைகள்
ரங்கநாத்திற்கு நீரஜா என்ற மகளும் ஒரு மகனும் உள்ள நிலையில், தந்தையின் கடைசி ஆசைக்கு மதிப்பளித்து அவர் கூறியபடியே அந்தப் பணத்தை வீட்டின் பணிப்பெண்ணிற்கு அவரது பிள்ளைகள் முழுமையாக வழங்கினர்.
வாழ்நாள் முழுவதும் பல படங்களில் நடித்துப் புகழ் ஈட்டிய ஒரு மூத்த கலைஞர், தனிமையின் காரணமாகத் தனது உயிரை மாய்த்துக்கொண்டதும், சொத்துகளைப் பணிப்பெண்ணிற்கு எழுதி வைத்ததும் திரையுலகில் இன்றளவும் ஆறாத வடுவாகவே உள்ளது.
மன அழுத்தம் ஏற்பட்டாலோ அல்லது தற்கொலை எண்ணம் வந்தாலோ, அதிலிருந்து விடுபடத் தமிழக அரசின் சுகாதார சேவை உதவி மையம் 104 மற்றும் சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் 044-24640050 ஆகிய எண்களைத் தொடர்பு கொண்டு ஆலோசனை பெறலாம்.