தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ் ஆவணப்படம் - பொம்மன்,பெள்ளி தம்பதியை பாராட்டிய குடியரசுத்தலைவர்
ஆவண குறும்பட பிரிவில் இந்தியா நாட்டில் தயாரிக்கப்பட்ட 'தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ்' என்னும் ஆவணப்படத்திற்கு ஆஸ்கார் விருது கிடைத்தது. இந்த பிரிவில் இந்தியாவிற்கு கிடைத்த முதல் ஆஸ்கர் விருது இந்த படத்திற்கு தான். நீலகிரி மாவட்டத்திலுள்ள முதுமலை பகுதிகளில் வசித்து வரும் பொம்மன்-பெள்ளி என்னும் தம்பதிகள் மற்றும் ரகு, அம்மு என்னும் 2 யானைகளுக்கும் இடையே நடக்கும் பாச போராட்டத்தினை மையமாக வைத்தே இப்படம் எடுக்கப்பட்டிருக்கும். இப்படத்திற்கு பின்னர் முதுமலைக்கு செல்லும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்த நிலையில், இந்த பொம்மன்-பெள்ளி தம்பதியினரும் உலகளவில் பிரபலமானார்கள்.
டெல்லி ராஷ்ட்ரபதி பவனில் குடியரசு தலைவரை சந்தித்த தம்பதி
இவர்களை பிரதமர் மோடி கடந்த ஏப்ரல் மாதம் தமிழ்நாடு வந்திருக்கையில் நேரில் சென்று சந்தித்து தனது வாழ்த்துக்களை தெரிவித்தார். அதே போல் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இவர்களை அழைத்து வாழ்த்து தெரிவித்து ரூ.1 லட்சம் நிதி உதவியினையும் வழங்கினார். இந்நிலையில் இவர்களை டெல்லி ராஷ்ட்ரபதிப்பவனில் சந்தித்த குடியரசு தலைவர் திரவுபதி முர்மு அவர்கள், ஆதரவற்ற யானைகளை பராமரிப்பதில் தங்கள் வாழ்நாள் முழுவதும் ஈடுபடுத்திக்கொண்டதினை பாராட்டி தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார் என்று செய்திகள் தெரிவிக்கிறது. இந்த சந்திப்பின் பொழுது இவர்களுடன் அமைச்சர் எல்.முருகன் அவர்களும் உடனிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.