ஆகஸ்ட் 30 முதல்: தங்கலான் படத்தின் இந்தி ரிலீஸ் தேதியை அறிவித்தது படக்குழு
தங்கலான் திரைப்படம் தென்னிந்தியாவில் பெற்ற மகத்தான வெற்றிக்குப் பிறகு, இந்தியில் ஆகஸ்ட் 30ஆம் தேதி வெளியிடப்பட உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிகர்கள் விக்ரம் மற்றும் மாளவிகா மோகனன் நடிப்பில் வெளிவந்த இப்படம் ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியானதில் இருந்து நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகியுள்ள இந்த படம் வசூல் ரீதியாக நல்ல பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷனைப் பெற்றுள்ளது. இந்நிலையில், வட இந்தியாவிலும் படத்தை வெளியிட திட்டமிட்ட படக்குழு, இந்தியில் டப்பிங் செய்து வெளியிடுகிறது. இந்த திரைப்படம் அதன் கதை, அதிரடி காட்சிகள் இந்தியிலும் நல்ல வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கேஜிஎஃப் வரலாற்றுப் பின்னணி
ஆங்கிலேயர் காலனித்துவ காலத்தில் கோலார் தங்க வயல்களின் (கேஜிஎஃப்) வரலாற்றுப் பின்னணியில், தங்கம் நிறைந்த இந்த நிலங்களின் சுரண்டல் மற்றும் கொள்ளை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு தங்கலான் உருவாக்கப்பட்டுள்ளது. மாய சக்திகளைக் கொண்ட பழங்குடித் தலைவியாக மாளவிகா மோகனனின் சித்தரிப்பு உட்பட படத்தின் தனித்துவமான கருத்து மற்றும் மாய கால நாடகக் கூறுகள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. படத்தின் வகையைப் பற்றி தயாரிப்பாளர் கே.இ.ஞானவேல்ராஜா பேசுகையில், "தங்கலானின் மூலம், 'மிஸ்டிகல் ரியலிசம்' என்ற துணை வகையை உருவாக்கி புதிய தளத்தை அமைப்பதே எங்கள் நோக்கம். இத்திரைப்படம் புராணக்கதைகளில் இருந்து பெரிதும் ஈர்க்கப்பட்டு, உண்மையான கதையுடன் இணைத்து உருவாக்கப்பட்டது. இது முற்றிலும் புதிய வகை முயற்சியாகும்." எனத் தெரிவித்துள்ளார்.