தமிழி: தமிழ் மொழியின் வரலாற்றையும், தொன்மையையும் உணர்த்தும் ஓர் ஆவணப்படம்!
இன்றைய தலைமுறை இளைஞர்கள் குழுவொன்று, தமிழ் மொழி குறித்த எழுத்து வடிவத் தடத்தைத் தேடி, 'தமிழி' என்ற ஆவணப்படத்தை தந்துள்ளனர். 7 பேர் கொண்ட அந்தக்குழுவில், அனைவருமே 30 வயதிற்கு உட்பட்டவர்கள் என்பது கூடுதல் ஆச்சரியம். 'தி ஹிந்து' பத்திரிக்கையில் வந்த செய்தியின் படி, தமிழ் எழுத்துக்களின் வரலாறு பற்றி பேசும் இந்த படத்தில், அரை நூற்றாண்டுக்கு முன்பு, புழக்கத்தில் இருந்த தமிழ் எழுத்துக்கள், சோழர் காலத்தின் தமிழ், அதற்கும் முற்பட்ட பொருநை ஆற்றுப் படுகை தமிழ் எழுத்துகள் என்று தமிழ் மொழியின் வரி வடிவத்தை பேசுவதாக உள்ளது அந்த படம். இந்த ஆவண படத்துக்கான ஆய்வுக்கு பொறுப்பு ச.இளங்கோ, இயக்கியவர் பிரதீப் குமார். இவர்களுடன் இணைந்து மேலும் ஐவர் 'தமிழி'யை உருவாக்கியுள்ளனர்.
'தமிழி'யில், ஹிப்ஹாப் ஆதியின் பங்கு
இக்குழுவினரின் முயற்சியை கேள்வியுற்ற ஹிப்ஹாப் தமிழா ஆதி, படத்தை தயாரிக்க முன் வந்ததுடன், படத்திற்காக தன் குரலையும் இசையையும் தந்திருக்கிறார். இது பற்றி பேசிய இளங்கோ,"நாங்கள் நினைத்ததைவிட சிறப்பான வரவேற்பு இருக்கிறது. பிற இந்திய மொழிகளில் இத்தொடரை மொழிமாற்றம் செய்து வெளியிட வேண்டுமென பலரும் கோரிக்கை விடுத்தது உண்மையில் இத்தொடருக்கு கிடைத்த வெற்றியாகவே கருதுகிறேன்"எனக்கூறினார். "ரோஜா முத்தையா நூலகத்தின் இயக்குநர் சுந்தர், சிந்துவெளி ஆய்வாளர் பாலகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ் ஆகியோர் இத்தொடரை முதலில் பார்த்து பாராட்டியதுடன் பல்வேறு அறிவுத்துறையினருக்கும் அறிமுகப்படுத்தினர்". "அப்போது தமிழ்நாடு தொல்லியல் துறையின் ஆணையராக இருந்த உதயசந்திரன் ஐ.ஏ.எஸ் தனது 'மாபெரும் சபைதனில்' என்கிற நூலில் இத்தொடருக்கு நல்லதொரு அறிமுகம் வழங்கிச் சிறப்பித்தார்" எனக்குறிப்பிட்டார் இளங்கோ.