குரலற்றவர்களுக்காக நடத்தப்படும் யூட்யூப் சேனல் பற்றி தெரியுமா?
'தி ஹிந்து'வில் பகிரப்பட்டுள்ள செய்தியின்படி, செவி கேளாதோருக்காகவும், குரலற்றவர்களுக்காகவும், பிரத்யேகமாக ஒரு யூட்யூப் நடத்தி வருகின்றனர், பத்துக்கும் மேற்பட்டோர் கொண்ட ஒரு குழு. 'Deaf Talks' எனப்பெயரிடப்பட்ட அந்த யூட்யூப் சேனலில், செவித்திறன் குறைபாடு மற்றும் வாய்பேச முடியாதவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய தினசரி செய்திகள், அறிவிப்புகள் மற்றும் முக்கிய நிகழ்வுகள் குறித்து வீடியோக்களை தயாரித்து பதிவேற்றி வருகின்றனர். இந்த குழுவில், குறைபாடுகளற்ற மனிதர்களுடன், சைகை மொழியில் விளக்குபவரும் இருக்கிறார்கள். இது பற்றி பேசிய இந்த குழுவின் சைமன் பிரபாகரன்,"தேசிய காதுகேளாதோர் சங்கத்தின் புள்ளி விவரப்படி, இந்தியாவில் 1.8 கோடி பேர் இக்குறைபாட்டால் பாதிக்கப்பட்டவர்களாக உள்ளனர். உலகம் முழுவதும் 45.6 கோடி பேர் உள்ளதாக இணையத்தில் புள்ளி விவரக் குறிப்புகள் கூறுகின்றன".
15 ஆயிரம் பேர் பின்தொடரும் Deaf Talks
"இங்கிலாந்தில், செவித்திறன் குறைபாடு மற்றும் வாய்பேச முடியாதவர்கள், அவசரகால எண்களை தொடர்பு கொண்டால், அது வீடியோ காலாக போகும் வசதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல், இதுபோன்ற சிறப்பு கவனம் தேவைப்படுபவர்களுக்காக, சைகை மொழி விளக்குநரும் அங்கு பணியில் இருப்பார்கள். நம் நாட்டிலும், அது போல, குறைந்தபட்சம் வீடியோ கால் வசதி மட்டுமாவது செய்து தர, அரசு முன்வர வேண்டும்" என்று அவர் மேலும் கூறினார். இந்த சேனல் தொடங்கப்பட்டு 8 மாதங்களுக்குள் இதுவரை 15 ஆயிரம் பேர் பின்தொடர்கின்றனர். அந்நிறுவனத்தின் செய்தி ஒருங்கிணைப்பாளர் பேசும்போது,"இன்றைய சூழலில் எல்லாமே இணையதளம்தான். குறிப்பாக கூகுள் தேடல்தான். ஆனால், அவற்றை பயன்படுத்த குறைந்தபட்ச ஆங்கிலம் தேவைப்படுகிறது. தேடல் கருவிகளில், சைகை மொழி பயன்பாட்டாளர்களுக்கான வசதிகளை ஏற்படுத்த வேண்டும்" எனக்கூறினார்.