Loading...
சூப்பர் சிங்கர் பிரகதியின் குற்றச்சாட்டுக்கு டீஜே கொடுத்த விளக்கம் என்ன?
சூப்பர் சிங்கர் பிரகதியின் குற்றச்சாட்டுக்கு டீஜே விளக்கமளித்துள்ளார்

சூப்பர் சிங்கர் பிரகதியின் குற்றச்சாட்டுக்கு டீஜே கொடுத்த விளக்கம் என்ன?

எழுதியவர் Venkatalakshmi V
Oct 23, 2026
02:58 pm

செய்தி முன்னோட்டம்

பிரபல சுயாதீன இசைக்கலைஞரும் நடிகருமான டீஜே அருணாச்சலம் மற்றும் 'சூப்பர் சிங்கர்' புகழ் பிரகதி குருபிரசாத் இடையே 'தேன்குடிக்க' மற்றும் 'நஹிலா நஹிலா' ஆல்பம் பாடல்கள் தொடர்பான ராயல்டி விவகாரம் சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பிரகதியின் பகிரங்க குற்றச்சாட்டுகளுக்கு டீஜே தனது சமூக வலைதள பக்கத்தில் விரிவான விளக்கமளித்துள்ளார். இந்தத் திட்டத்தின் மூலம் தான் தனிப்பட்ட முறையில் எந்த லாபமும் அடையவில்லை என்றும், தனது படைப்புகளிலிருந்து வந்த வருமானம் 'ரெபல்ஸ்டார் ரெக்கார்ட்ஸ்' மேலாளர் குமார் சந்தாவால் அபகரிக்கப்பட்டதாகவும் டீஜே விளக்கம் அளித்துள்ளார். மேலும், இந்தப் புகார்களை நிரூபிக்க பிரகதி தரப்பில் தகுந்த சான்றுகளோ ஒப்பந்தங்களோ சமர்ப்பிக்கப்படவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

குற்றச்சாட்டு

பிரகதியின் குற்றச்சாட்டு என்ன?

கடந்த 10 ஆண்டுகளாக தான் அமைதியாக இருந்ததாகவும், ஆனால் 'தேன்குடிக்க' பாடல் 85 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைக் கடந்து சாதனை படைத்திருந்தும் தனக்குச் சேர வேண்டிய ராயல்டி தொகை ஒரு ரூபாய்கூட வழங்கப்படவில்லை எனப் பிரகதி தனது இன்ஸ்டாகிராம் பதிவில் குற்றம்சாட்டியிருந்தார்.

மேலும், 'நஹிலா நஹிலா' பாடலில் தனது அனுமதியின்றி முழுமையாக முடிக்கப்படாத வெர்ஷனை பதிவேற்றியதாகவும், லீகல் நோட்டீஸ் அனுப்பிய பிறகே ஒரு மாதத்திற்கு முன்பு 'தேன்குடிக்க' பாடலில் தனது பெயரே சேர்க்கப்பட்டதாகவும் அவர் வேதனை தெரிவித்திருந்தார்.

விளக்கம்

டீஜே அருணாச்சலத்தின் விளக்கம்

பிரகதியின் குற்றச்சாடுகளுக்குப் பதிலளித்துள்ள டீஜே, தனது தரப்பு உண்மைகளை விளக்கி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ஆரம்பத்தில் டீஜேவின் 'எனக்கு ஒரு ஆசை' ஆல்பத்தில் பிரகதி பின்னணிப் பாடகியாக பாடியதாகவும், அதன் தொடர்ச்சியாக 'தேன்குடிக்க' பாடலின் பெண் குரலாகவும், மியூசிக் வீடியோவின் கதாநாயகியாகவும் பிரகதியும் அவரது தாயார் கனகா குருபிரசாத்தும் சம்பளமின்றி பங்களிக்க ஒப்புக்கொண்டதாக டீஜே தெரிவித்துள்ளார்.

பின்னர் பிரகதிக்கு தமிழ் சினிமாவில் வாய்ப்பு வந்ததால், மியூசிக் வீடியோ படப்பிடிப்பிற்கு வர முடியாது என அவரது தாயார் கூறிவிட்டதாகவும், இதனால் வேறு நடிகை (ஸ்ருதி சீனிவாசன்) ஒப்பந்தம் செய்யப்பட்ட போதிலும், பாடகியாக பிரகதியின் பெயரே நீடிக்க அனுமதிக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ADVERTISEMENT