பிரபஞ்ச அழகி சுஷ்மிதா சென்னும், தமிழ் சினிமாவும்!
ஹிந்தி நடிகை சுஷ்மிதா சென், 1994 இல் பிரபஞ்ச அழகி பட்டத்தை வென்ற முதல் இந்தியர். அதன் பிறகு திரையுலகில் கால் பதித்தார். பிறப்பில் பெங்காலியான சுஷ்மிதா, தனது பள்ளி படிப்பை செகந்தராபாதில் பயின்றார். ராணுவ குடும்பத்தில் பிறந்த சுஷ்மிதா, பள்ளிப்படிப்பிற்கு பிறகு நேரடியாக மாடலிங் துறையில் நுழைந்து, பின்னர் பிரபஞ்ச அழகி பட்டம் பெற்று, தற்போது இரண்டு பெண் குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருகிறார். அவருக்கும், தமிழ் சினிமாவிற்கும் இருக்கும் தொடர்பு பற்றி சிறு குறிப்பு: தமிழ் திரையுலகில், 'ரட்சகன்' என்ற படம் மூலம் அறிமுகம் ஆனவர் சுஷ்மிதா சென். நாகார்ஜூனா ஹீரோவாக நடிக்க, பிரவீன் காந்தி இயக்கிய இப்படம் 1997 இல் வெளியானது.
தமிழ் ரீமேக் படங்களில் நடித்துள்ள சுஷ்மிதா
இந்த படம் மிகப்பெரிய வெற்றியடைந்தது. படத்தின் பாடல்களும், சுஷ்மிதா சென்னின் நடிப்பும் வெகுவாக பாராட்டப்பட்டது. அதன் பிறகு மும்பை படவுலகில் கவனம் செலுத்த தொடங்கிய சுஷ்மிதா, அவ்வப்போது தமிழிலும் தோன்றினார். ஷங்கர் இயக்கத்தில், அர்ஜுன் நடித்த 'முதல்வன்' படத்தில் வெளியான 'ஷகாலக்க பேபி' பாடல் பட்டிதொட்டி எங்கும் பிரபலமானது. அந்த பாடலில் அழகாக நடனமாடிய சுஷ்மிதா சென்னை யாரும் மறக்கமாட்டார்கள். வசுந்தரா தாஸ் குரலில் மிக நளினமாக ஆடியிருப்பார். அதன் பின்னர் நேரடி தமிழ் படங்கள் எதிலும் சுஷ்மிதா நடிக்கவில்லை. இருப்பினும், தமிழ் மொழி மாற்று படங்கள் சிலவற்றில் நடித்துள்ளார். 'சாதி லீலாவதி' படத்தின் ஹிந்தி பதிப்பான 'பீவி நம்பர் 1' படத்தில், ஹீரா கதாபாத்திரத்தில் கச்சிதமாக பொருந்தி இருந்தார் சுஷ்மிதா சென்.