LOADING...
நடிகர் சூர்யாவும் அரசியலுக்கு வருகிறாரா? சூர்யா நற்பணி இயக்கம் பரபரப்பு அறிக்கை
நடிகர் சூர்யா

நடிகர் சூர்யாவும் அரசியலுக்கு வருகிறாரா? சூர்யா நற்பணி இயக்கம் பரபரப்பு அறிக்கை

எழுதியவர் Sekar Chinnappan
Jun 29, 2026
02:19 pm

செய்தி முன்னோட்டம்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக விளங்கும் சூர்யா விரைவில் அரசியலுக்கு வரவுள்ளார் என்று பரவி வந்த தகவல்களுக்கு அவரது தலைமை நற்பணி இயக்கம் தற்பொழுது அதிகாரப்பூர்வமாக விளக்கம் அளித்து முற்றுப்புள்ளி வைத்துள்ளது. அகரம் அறக்கட்டளை மற்றும் நற்பணி இயக்கம் மூலமாக மக்களுக்கு சேவை செய்வதே அவருக்கு மனநிறைவைத் தருவதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. கூடுதல் விபரங்கள் இங்கே:-

வதந்திக்கான காரணம்

அரசியல் வதந்தி உருவாவதற்குக் காரணமான சென்னை கூட்டப் பேச்சு

சென்னையில் நேற்று அகில இந்திய சூர்யா தலைமை நற்பணி இயக்கத்தின் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்வில் பேசிய வீரமணி என்பவர், காலம் மற்றும் கடவுள் முடிவு செய்துவிட்டதாகவும், சூர்யா விரைவில் மக்கள் தலைவராக வருவதை யாராலும் தடுக்க முடியாது என்றும் பேசினார். இந்த உரை அடங்கிய வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவியதைத் தொடர்ந்து, சூர்யா அரசியலுக்கு வருகிறார் என்ற செய்திகள் பரவத் தொடங்கின.

விளக்கம்

சூர்யா நற்பணி இயக்கம் அளித்துள்ள விளக்கம்

இந்த சர்ச்சை குறித்துப் பேசிய வீரமணி, தான் நீண்ட நேரம் பேசிய உரையில் சில நிமிட காட்சிகளை மட்டும் எடுத்து தவறான புரிதலை ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிவித்தார். தான் பேசியது முற்றிலும் தனது தனிப்பட்ட கருத்து என்றும், இதற்கும் சூர்யாவுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றும் அவர் புதிய வீடியோ மூலம் விளக்கமளித்துள்ளார். இதற்கிடையே, வீரமணி கடந்த 3 ஆண்டுகளாக நற்பணி மன்றத்தின் எந்தவொரு நிர்வாகப் பொறுப்பிலும் இல்லை என்பதைத் தலைமை நற்பணி இயக்கம் தனது அறிக்கையில் தெளிவுபடுத்தியுள்ளது.

Advertisement

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

Advertisement

சமூக சேவை

சமூகச் சேவைகளில் மட்டுமே சூர்யாவின் முழுக் கவனம்

திரையுலகில் இருந்து நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியைத் தொடங்கி அண்மையில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களை வென்று முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ளார். இதனைத் தொடர்ந்து சூர்யாவும் அரசியலுக்கு வரலாம் என்ற விவாதங்கள் எழுந்த நிலையில், சூர்யாவுக்கு அரசியலுக்கு வரும் எண்ணம் துளியும் இல்லை என்று நற்பணி இயக்கம் திட்டவட்டமாக அறிவித்துள்ளது. ஏழை எளிய மக்களின் கல்விக்காக செயல்படும் அகரம் அறக்கட்டளை மூலமாகத் தனது நற்பணிகளைத் தொடர்வதிலேயே அவர் மிகுந்த மகிழ்ச்சி கொள்கிறார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement