ஹைதராபாத்தில் புஷ்பா 2 சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி பெண் மரணம்
ஹைதராபாத்தில் புஷ்பா 2 அதிகாலை சிறப்புக்காட்சி இன்று அதிகாலை முதல் துவங்கியது. இதற்காக புதன்கிழமை இரவு அங்குள்ள சந்தியா என்ற தியேட்டரில் ஒரு பெரிய கூட்டம் கூடியது. அப்போது ஏற்பட்ட நெரிசலில் ஒரு பெண் உயிரிழந்துள்ளார். மாத்ருபூமி வெளியிட்ட செய்தியின்படி நடிகர் அல்லு அர்ஜுனைப் பார்ப்பதற்காக தியேட்டர் அருகே நெரிசல் போன்ற சூழ்நிலை ஏற்பட்டதால் 39 வயதான பெண் இறந்தார் மற்றும் அவரது குழந்தை ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் தில்சுக்நகரைச் சேர்ந்த ரேவதி என அடையாளம் காணப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் தனது கணவர் பாஸ்கர் மற்றும் அவர்களது இரண்டு குழந்தைகளுடன் அல்லு அர்ஜுன் நடித்த திரைப்படத்தின் திரையிடலில் கலந்து கொள்ள வந்திருந்தார்.
Twitter Post
அல்லு அர்ஜுனை காண குவிந்த கூட்டத்தில் ஏற்பட்ட அசம்பாவிதம்
புதன்கிழமை இரவு 10.30 மணியளவில் அல்லு அர்ஜுன் வருகை தந்தபோது தியேட்டர் அருகே கடும் குழப்பம் ஏற்பட்டது. திரண்டிருந்த கூட்டத்தை போலீசார் கட்டுப்படுத்த முயன்றதால், நெரிசல் ஏற்பட்டது. போலீசார் லேசாக தடியடி நடத்தியதாகவும், அப்போது ஏற்பட்ட தள்ளுமுள்ளில் ரேவதி உயிரிழந்தார். இது குறித்து Xஇல் பல வீடியோக்கள் வெளிவந்துள்ளன. இது தியேட்டருக்கு அருகிலுள்ள குழப்பமான சூழ்நிலையைப் பற்றிய ஒரு பார்வையை அளித்தது. பெரும் கூட்டத்தில் மயங்கிய நிலையில் இருந்த ரேவதிக்கு ஒரு நபர் விரைந்து வந்து CPR-ஐ செலுத்துவதையும் அந்த வீடியோ காட்சிகள் காட்டின. உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அந்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த குழப்பத்தில் தியேட்டர்களின் பிரதான வாயில் கூட இடிந்து விழுந்ததாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.