நூலிழையில் உயிர் தப்பிய SJ சூர்யா; கில்லர் படப்பிடிப்பு தளத்தில் பயங்கர விபத்து
செய்தி முன்னோட்டம்
இயக்குநரும் நடிகருமான எஸ்.ஜே.சூர்யா சுமார் 10 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் மெகா பட்ஜெட்டில் இயக்கி, நடித்து வரும் 'கில்லர்' திரைப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் நேரிட்ட பயங்கர சிலிண்டர் விபத்து, ஒட்டுமொத்தத் தமிழ்த் திரையுலகையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சென்னை பெரம்பூரில் உள்ள பின்னி மில் வளாகத்தில் நடைபெற்ற இந்த விபத்தில் சிக்கி, படப்பிடிப்புத் தள ஊழியர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த விபத்தில் நடிகர் SJ சூர்யா நூலிழையில் உயிர் தப்பியுள்ளார் எனவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
விபத்து
அதிகாலை சண்டைக் காட்சியின் போது நேரிட்ட விபத்து
தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் பான்-இந்தியா திரைப்படமாக உருவாகி வரும் கில்லர் திரைப்படத்திற்கு ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். ப்ரீத்தி அஸ்ராணி கதாநாயகியாக நடிக்கும் இத்திரைப்படத்தை கோகுலம் மூவிஸ் நிறுவனத்துடன் இணைந்து ஏஞ்சல் ஸ்டூடியோஸ் தயாரித்து வருகிறது. இதன் முக்கிய ஆக்ஷன் சண்டைக் காட்சிகள் சென்னை பெரம்பூர் பின்னி மில்லில் பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டுப் படமாக்கப்பட்டு வந்தன. இன்று அதிகாலை சண்டைக் காட்சிகளைப் பதிவு செய்யும் பணிகள் தீவிரமாக நடந்து கொண்டிருந்த போதே இந்த எதிர்பாராத விபத்து நேரிட்டுள்ளது.
சம்பவம்
கார்பன் டை ஆக்சைடு சிலிண்டர் வெடித்தது எப்படி?
விபத்து குறித்துத் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த பெரம்பூர் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், சண்டைக் காட்சிகளுக்காகப் புகை மூட்டத்தை உருவாக்குவதற்காகப் படப்பிடிப்பு தளத்தில் வைக்கப்பட்டிருந்த கார்பன் டை ஆக்சைடு (CO2) சிலிண்டர் திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியது தெரியவந்துள்ளது. இந்த வெடி விபத்தின் தாக்கம் மிகக் கொடூரமாக இருந்ததால், அதன் அருகில் வேலை செய்து கொண்டிருந்த ஊழியர்கள் தூக்கி வீசப்பட்டனர்.
பலி
ஒருவர் பலி; மூவர் ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அனுமதி
இந்தக் கொடூர விபத்தில், சென்னை மதுரவாயல் பகுதியைச் சேர்ந்த மதன் (வயது 25) என்ற திரைப்படத் தொழிலாளி சம்பவ இடத்திலேயே பலத்த காயமடைந்து பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், இடிபாடுகளில் சிக்கி தினகரன், சூர்யா, சக்திவேல் ஆகிய மூன்று ஊழியர்கள் படுகாயமடைந்தனர். அவர்கள் மூவரும் உடனடியாக மீட்கப்பட்டுச் சிகிச்சைக்காகச் சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிரச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. படப்பிடிப்புத் தளங்களில் பாதுகாப்பு நெறிமுறைகள் முறையாகப் பின்பற்றப்பட்டனவா என்பது குறித்தும், விபத்துக்கான துல்லியமான காரணம் குறித்தும் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் காரணமாகக் கில்லர் படத்தின் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.