Loading...
அரசியல் மாநாடு போல் காட்சியளித்த எஸ்கே நிர்வாகிகள் சந்திப்பு: சென்னையில் 2000 பேர் பங்கேற்பு
அரசியல் மாநாடு போல் காட்சியளித்த எஸ்கே நிர்வாகிகள் சந்திப்பு

அரசியல் மாநாடு போல் காட்சியளித்த எஸ்கே நிர்வாகிகள் சந்திப்பு: சென்னையில் 2000 பேர் பங்கேற்பு

எழுதியவர் Vasuki
Oct 04, 2026
06:56 pm

செய்தி முன்னோட்டம்

சேயோன் படத்தில் நடித்து வரும் நடிகர் சிவகார்த்திகேயன், தனது நற்பணி இயக்க நிர்வாகிகளைச் சென்னையில் பிரம்மாண்டமாகச் சந்தித்துப் பேசியுள்ளது திரையுலகிலும் அரசியல் வட்டாரத்திலும் கவனத்தை ஈர்த்துள்ளது. தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நாயகனான சிவகார்த்திகேயன், தற்போது இயக்குநர் சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில் உருவாகி வரும் 'சேயோன்' திரைப்படத்தில் தீவிரமாக நடித்து வருகிறார். திரைப்படப் பணிகளுக்கு மத்தியிலும், தனது ரசிகர் மன்றங்களை முழுமையான மக்கள் சேவை அமைப்பாக மாற்றி, சிவகார்த்திகேயன் நற்பணி இயக்கம் மூலம் மாநிலம் முழுவதும் ரத்ததான முகாம்கள், ஏழை மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை மற்றும் பொதுமக்களுக்கான பல்வேறு நலத்திட்ட உதவிகளைத் தொடர்ந்து முன்னெடுத்து வருகிறார்.

வெள்ளை சட்டையுடன் பங்கேற்ற நிர்வாகிகள்

2,000 நிர்வாகிகள் பங்கேற்பு

இந்நிலையில், தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களைச் சேர்ந்த நற்பணி இயக்க நிர்வாகிகளையும் நேரில் சந்தித்து ஆலோசனை நடத்த சிவகார்த்திகேயன் முடிவு செய்தார்.

அதன்படி, சென்னை போரூர் அருகே உள்ள முகலிவாக்கம் - பரணிபுத்தூர் பகுதியில் அமைந்துள்ள தனியார் மண்டபத்தில் பிரம்மாண்ட நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

ஒரு அரசியல் கட்சியின் மாநில மாநாடு போன்று அமைக்கப்பட்டிருந்த பிரம்மாண்ட மேடையில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வருகை தந்த 2,000-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் அனைவரும் ஒரே மாதிரியாக வெள்ளை சட்டை அணிந்து கட்சித் தொண்டர்களைப் போல உற்சாகத்துடன் பங்கேற்றனர்.

தனுஷ், சூர்யாவைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன்

அரசியல் மாநாடு பாணி

அண்மைக் காலங்களாக நடிகர்கள் தனுஷ், சூர்யா ஆகியோர் தங்களது ரசிகர் மன்ற நிர்வாகிகளை அழைத்துத் தொடர் கூட்டங்களை நடத்தி வரும் நிலையில், தற்போது நடிகர் சிவகார்த்திகேயனும் மாநிலம் தழுவிய அளவில் 2000-க்கும் மேற்பட்ட நிர்வாகிகளைத் திரட்டி மாநாடு பாணியில் இத்தகைய ஆலோசனைக் கூட்டத்தை நடத்தியிருப்பது மிகுந்த கவனத்தைப் பெற்றுள்ளது.

கூட்டத்தில் பேசிய சிவகார்த்திகேயன், நற்பணிகளை அடித்தட்டு மக்களுக்குக் கொண்டு சேர்ப்பது குறித்தும், இயக்கத்தை மேலும் ஒருங்கிணைப்பது குறித்தும் நிர்வாகிகளுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.

ADVERTISEMENT