சென்னை ஸ்டுடியோவில் நடந்த கொடூரம்: பிரபல இசையமைப்பாளர் மீது பாடகி ஸ்வாகதா குற்றசாட்டு
செய்தி முன்னோட்டம்
'இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்' படத்தில் 'ஏனோ பெண்ணே' மற்றும் 'பேச்சுலர்' படத்தில் 'காதல் கண்மணி' போன்ற சூப்பர் ஹிட் பாடல்களைப் பாடிய பிரபல பாடகி ஸ்வாகதா எஸ் கிருஷ்ணன், தான் ஏன் சென்னையை விட்டு வெளியேறி ரிஷிகேஷில் குடியேறினார் என்பது குறித்த அதிர்ச்சிகரமான உண்மைகளை உடைத்துள்ளார். சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், ஒரு முன்னணி இசை அமைப்பாளரின் ஸ்டுடியோவில் தான் சந்தித்த "கொடூரமான பாலியல் வன்கொடுமை" குறித்தும், அதன் பின்னாலுள்ள மிரட்டல்கள் குறித்தும் அவர் மனம் திறந்துள்ளார். தனக்கு இழைக்கப்பட்ட கொடுமை குறித்துப் பேசிய ஸ்வாகதா, அது தான் மிகவும் பாதுகாப்பானது எனக் கருதிய ஒரு இசை அமைப்பாளரின் ஸ்டுடியோவிலேயே நடந்ததாக கூறியுள்ளது கோலிவுட் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
பாலியல் சீண்டல்
சவுண்ட் புரூப் அறையும் ரகசிய கேமராக்களும்
"அது ஒரு சவுண்ட் புரூப் (Soundproof) அறை. நான் எவ்வளவு சத்தமாக அலறினாலும் வெளியே யாருக்கும் கேட்காது. அந்த அறை பூட்டப்பட்டிருந்தது. அங்கு மறைமுக கேமராக்கள் (CCTV) பொருத்தப்பட்டிருந்தன," என அவர் அந்தத் தருணத்தை நினைவு கூர்ந்துள்ளார். மேலும், அந்த நபர் அந்த செயல்களை பதிவு செய்து, அதன் மூலம் தன்னை மிரட்டியதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். அந்த பிரபல இசையமைப்பாளர் ஒரு திட்டமிட்ட குற்றவாளி எனச் சாடிய ஸ்வாகதா, அவர் பெண்களைக் கையாளும் விதத்தை பற்றியும் கூறியுள்ளது தற்போது பேசுபொருள் ஆகியுள்ளது.
தொடர் குற்றவாளி
திட்டமிட்ட 'சீரியல் அப்யூசர்'
அந்த இசையமைப்பாளர் முதலில் ஒரு வழிகாட்டி (Mentor) போலப் பழகி, அதிக அக்கறை காட்டுவது போல நடித்துப் பெண்களின் நம்பிக்கையைப் பெறுவாராம். பின்னர், சுதந்திரமாகச் செயல்படும் பெண்களைக் குறிவைத்து, முதலில் கடன் வாங்குவார். பின்னர் பணத்தைத் திருப்பித் தராமல் இழுத்தடித்து, அவர்களைத் தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவாராம். தான் மட்டும் இன்றி, இன்னும் பல பெண்கள் மற்றும் குழந்தைகள் கூட அந்த ஸ்டுடியோவில் இது போன்ற கேமரா மிரட்டல்களுக்கு உள்ளாகியிருக்கலாம் என ஸ்வாகதா சந்தேகம் எழுப்பியுள்ளார்.
மீட்பு
அதிர்ச்சியிலிருந்து மீண்டு வந்த பயணம்
இந்தச் சம்பவத்திற்குப் பிறகு ஸ்வாகதா கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார். "அவர் தொட்ட உடல் பாகங்கள் என் உடலில் இருக்கக் கூடாது என நினைத்துச் சரும சிகிச்சைகளை மேற்கொண்டேன்" என அவர் வேதனையுடன் பகிர்ந்துள்ளார். திரையுலகில் அவருக்கு ஆதரவு கிடைக்காதது மட்டுமின்றி, அவர் மீது திருட்டுப் பழியும் சுமத்தப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார். தனது சகோதரி, மாயா கிருஷ்ணன் மற்றும் மனநலச் சிகிச்சையின் உதவியோடு தற்போது அவர் இதிலிருந்து மீண்டு வந்துள்ளார். தற்போது ரிஷிகேஷில் தனது வாழ்வைச் சுயமாகக் கட்டமைத்து வரும் ஸ்வாகதா, இனி எந்தப் பெண்ணுக்கும் இந்த நிலை ஏற்படக் கூடாது என்பதற்காக அந்த நபர் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப் போவதாகத் தெரிவித்துள்ளார்.