LOADING...
பாடகி ஜானகி அம்மாவிற்கு நேர்ந்த சோகம்! ஒரே மகன் முரளி கிருஷ்ணா திடீர் மரணம்! திரையுலகமே கண்ணீர்!
பழம்பெரும் பாடகி எஸ். ஜானகியின் மகன் முரளி கிருஷ்ணா காலமானார்

பாடகி ஜானகி அம்மாவிற்கு நேர்ந்த சோகம்! ஒரே மகன் முரளி கிருஷ்ணா திடீர் மரணம்! திரையுலகமே கண்ணீர்!

எழுதியவர் Sekar Chinnappan
Jan 22, 2026
07:01 pm

செய்தி முன்னோட்டம்

இந்திய சினிமாவின் புகழ்பெற்ற பின்னணிப் பாடகி எஸ்.ஜானகியின் ஒரே மகனான முரளி கிருஷ்ணா, வியாழக்கிழமை (ஜனவரி 22) அதிகாலை மாரடைப்பு காரணமாகக் காலமானார். திடீரென ஏற்பட்ட இந்த மரணம், அவரது குடும்பத்தினரையும் இசை ரசிகர்களையும் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கடந்த சில ஆண்டுகளாகத் தனது தாயார் ஜானகியுடன் அவர் வசித்து வந்தார். வியாழக்கிழமை அதிகாலை முரளி கிருஷ்ணாவுக்குத் திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. எந்தவிதமான முன்கூட்டிய உடல்நலப் பாதிப்புகளும் இல்லாத நிலையில், அவருக்குத் திடீர் மாரடைப்பு ஏற்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மருத்துவ உதவி கிடைப்பதற்கு முன்பே அவரது உயிர் பிரிந்தது. முரளி கிருஷ்ணாவுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கலை

முரளி கிருஷ்ணாவின் கலை ஆர்வம்

இசை மற்றும் கலைகள் நிறைந்த குடும்பத்தில் வளர்ந்த முரளி கிருஷ்ணா, சினிமா மீது மிகுந்த ஆர்வம் கொண்டவர். குறிப்பாகத் தமிழ் மற்றும் தெலுங்குத் திரைப்படங்களில் ஆழ்ந்த ஈடுபாடு இருந்தது. மேலும், அவர் முறைப்படி பரதநாட்டியம் பயின்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. தனது தாயாரின் இசைப் பயணத்தில் அவருக்குப் பெரும் துணையாக இருந்து வந்தார். முரளி கிருஷ்ணாவின் மறைவுச் செய்தியைக் கேட்டுத் திரையுலகைச் சேர்ந்த பலரும் ஜானகி அம்மாவிற்குத் தங்கள் ஆறுதல்களைத் தெரிவித்து வருகின்றனர். பிரபல பாடகி கே.எஸ்.சித்ரா தனது சமூக வலைதளப் பக்கத்தில், "முரளி அண்ணாவின் திடீர் மறைவுச் செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்தேன். ஒரு அன்பான சகோதரனை இழந்துவிட்டேன். இந்தத் தாங்க முடியாத துயரத்தைத் தாங்கும் சக்தியை ஜானகி அம்மாவிற்கு இறைவன் வழங்கட்டும்." என்றார்.

Advertisement