பாக்ஸ் ஆபீஸில் அருந்ததி சாதனையை முறியடித்தது சமந்தாவின் மா இண்டி பங்காரம்; முழு விபரம்
செய்தி முன்னோட்டம்
நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிகை சமந்தா ரூத் பிரபு முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்து ஜூன் 19 அன்று வெளியான மா இண்டி பங்காரம் திரைப்படம் தற்பொழுது பாக்ஸ் ஆபீஸில் அசாத்திய வசூல் வேட்டை நடத்தி வருகிறது. பி வி நந்தினி ரெட்டி இயக்கத்தில் கமர்ஷியல் ஆக்ஷன் மற்றும் ஃபேமிலி காமெடி டிராமாவாக வெளியாகி உள்ள இத்திரைப்படம், சமந்தாவின் அசாத்திய நடிப்புத் திறனால் ரசிகர்களை பெருமளவில் கவர்ந்துள்ளது. வெறும் 20 கோடி ரூபாய் என்ற மிகக் குறைந்த பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட இந்தத் திரைப்படம், தற்பொழுது உலக அளவில் தனது தயாரிப்பு செலவை விட 4 மடங்கு அதிக லாபத்தை ஈட்டி சாதனை படைத்துள்ளது.
அருந்ததி சாதனை
அருந்ததி படத்தின் 17 ஆண்டுகால வசூல் சாதனை காலி
தெலுங்கு திரையுலகில் கடந்த 2009 ஆம் ஆண்டு வெளியாகி 70 கோடி ரூபாய் வரை வசூலித்த அனுஷ்கா ஷெட்டியின் அருந்ததி திரைப்படமே, கடந்த 17 ஆண்டுகளாக மிக அதிக வசூல் செய்த பெண் முதன்மைக் கதாபாத்திரத் திரைப்படமாகத் திகழ்ந்து வந்தது. தற்பொழுது சமந்தாவின் மா இண்டி பங்காரம் திரைப்படம் வெளியான வெறும் 10 நாட்களில் அந்த சாதனையைத் தகர்த்துப் புதிய சரித்திரம் படைத்துள்ளது. தற்பொழுது வரை உலக அளவில் சுமார் 90.15 கோடி ரூபாய் மொத்த வசூலைக் குவித்துள்ள இந்த திரைப்படம், விரைவில் 100 கோடி ரூபாய் கிளப்பில் இணைய மிக வேகமாக முன்னேறி வருகிறது.
16வது நாள்
16 ஆவது நாளில் 86 சதவீதத்திற்கும் மேல் எகிறிய வசூல்
இத்திரைப்படம் தனது 3 ஆவது வாரத்தின் சனிக்கிழமையான 16 ஆவது நாளில் உள்நாட்டு சந்தையில் மீண்டும் ஒரு மிகப்பெரிய வசூல் எழுச்சியைக் கண்டுள்ளது. முந்தைய வெள்ளிக்கிழமை வசூலுடன் ஒப்பிடும்போது சனிக்கிழமை அன்று மட்டும் சுமார் 86.7 சதவீதம் வளர்ச்சியைப் பெற்று, இந்தியாவில் மட்டும் 1.40 கோடி ரூபாய் நிகர வசூலை அள்ளியுள்ளது. இதன் மூலம் இந்தியாவின் ஒட்டுமொத்த நிகர வசூல் 56.10 கோடி ரூபாயாகவும், மொத்த வசூல் 64.95 கோடி ரூபாயாகவும் உயர்ந்துள்ளது. அதேபோல திரையரங்குகளில் இரவு காட்சிகளின் ஆக்கிரமிப்புத் திறன் அதிகபட்சமாக 32.83 சதவீதமாகப் பதிவாகியுள்ளது.
சாதனை
வட அமெரிக்காவில் 2 மில்லியன் டாலர் கடந்து சாதனை
உள்நாட்டு சந்தை மட்டுமின்றி, வெளிநாடுகளில் வாழும் புலம்பெயர்ந்த இந்திய வம்சாவளி மக்களிடையேயும் இத்திரைப்படத்திற்குப் பலத்த வரவேற்பு கிடைத்துள்ளது. வெளிநாட்டு வசூல் மட்டும் தற்பொழுது வரை சுமார் 25.20 கோடி ரூபாயைத் தொட்டுள்ளது. குறிப்பாக, வட அமெரிக்கா திரையரங்குகளில் தனது 3 ஆவது வார இறுதி நாட்களின் போது 2 மில்லியன் டாலர் என்ற வசூல் மைல்கல்லைக் கடந்து சமந்தாவின் சர்வதேச மார்க்கெட் மதிப்பை இத்திரைப்படம் மீண்டும் நிரூபித்துள்ளது.
கூட்டணி
ராஜ் நிடிமோரு மற்றும் சமந்தா கூட்டணியின் முதல் வெற்றி
இத்திரைப்படத்தின் கதையை எழுதி, இணை தயாரிப்பாளராக பங்களித்துள்ள ராஜ் நிடிமோரு மற்றும் சமந்தா கூட்டணியில் தெலுங்கில் வெளியான முதலாவது நேரடித் திரைப்படம் இதுவாகும். ஸ்வர்ணா என்ற சாதாரண குடும்பத்துப் பெண் தனது கடந்த காலப் பகையையும் கொடூர எதிரிகளையும் எப்படி ஆக்ஷன் மற்றும் புத்திசாலித்தனத்தால் எதிர்கொள்கிறார் என்பதே இப்படத்தின் மையக்கதையாகும். இப்படத்தில் சமந்தாவுடன் இணைந்து குல்ஷன் தேவையா, திகந்த் மஞ்சாலே, ஸ்ரீமுகி மற்றும் மஞ்சுஷா முல்லவல்லி ஆகியோர் தங்களது எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.