LOADING...
காந்தாரா: அத்தியாயம் 1 படப்பிடிப்பின் போது படகு கவிழ்ந்து விபத்து; அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய படக்குழுவினர்
காந்தாரா: அத்தியாயம் 1 படப்பிடிப்பின் போது படகு கவிழ்ந்து விபத்து

காந்தாரா: அத்தியாயம் 1 படப்பிடிப்பின் போது படகு கவிழ்ந்து விபத்து; அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய படக்குழுவினர்

எழுதியவர் Sekar Chinnappan
Jun 15, 2025
08:44 pm

செய்தி முன்னோட்டம்

கர்நாடகாவின் சிவமோகா மாவட்டத்தில் உள்ள மணி நீர்த்தேக்கத்தில் படகு கவிழ்ந்ததில் நடிகர்-இயக்குனர் ரிஷப் ஷெட்டி மற்றும் அவரது படக்குழுவினர் மயிரிழையில் ஒரு பெரிய விபத்தில் இருந்து தப்பினர். இந்த சம்பவம் மஸ்தி கட்டே பகுதிக்கு அருகில், மெலினா கொப்பா என்று உள்ளூர்வாசிகளால் அறியப்படும் ஆழமற்ற பகுதியில் நடந்தது. ஆழமற்ற பகுதி என்பதால் அதிர்ஷ்டவசமாக உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது. ரிஷப் ஷெட்டி உட்பட 30 குழுவினரும் காயமின்றி இருந்தபோதிலும், கேமராக்கள் உள்ளிட்ட படப்பிடிப்பு உபகரணங்கள் தண்ணீரில் மூழ்கியதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து தீர்த்தஹள்ளி போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். விபத்தைத் தொடர்ந்து உள்ளூர் நம்பிக்கைகள் மற்றும் ஆன்மீக கவலைகள் கவனம் ஈர்த்துள்ளது.

வணிகமயமாக்கல்

வணிகமயமாக்கலுக்கு எதிராக விமர்சனம்

தட்சிண கன்னடத்தின் புனித ஆவிகள் (பூதங்கள்-தெய்வங்கள்) தாங்கள் குறித்த கதைகளை வணிகமயமாக்குவதை விரும்பவில்லை என்பதை இது எடுத்துக் காட்டுவதாக நாடகக் கலைஞர் ராமதாஸ் பூஜாரி விமர்சங்களை வெளிப்படுத்தினார். இருப்பினும், படத்தை தொடங்குவதற்கு முன்பு ஷெட்டி தெய்வீக அனுமதி கோரி விரிவான சடங்குகளைச் செய்ததாக உள்ளூர் பூசாரி ஒருவர் குறிப்பிட்டார். பீதி இருந்தபோதிலும், ஆழமற்ற நீர்நிலைகள் அனைவரின் பாதுகாப்பையும் உறுதி செய்ததன் மூலம், புனித ஆவிகள் ஏதோ ஒரு வகையில் நம்மை ஆசீர்வதித்திருப்பதை இது காட்டுவதாக படக்குழுவில் ஒருவர் கூறியதாக பிடிஐ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னடைவு 

காந்தாரம் அத்தியாயம் 1 படப்பிடிப்பில் தொடர் பின்னடைவு

படம் பல பின்னடைவுகளைச் சந்தித்துள்ளது. மே 2025 இல், ஒரு ஜூனியர் கலைஞரின் மரணத்திற்குப் பிறகு படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. கடந்த மாதத்தில் தொடர்பில்லாத சம்பவங்களில் மூன்று குழு உறுப்பினர்கள் இறந்தனர். காந்தாரா: அத்தியாயம் 1 என்பது ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்த 2022 ஆம் ஆண்டு பிளாக்பஸ்டர் காந்தாரா படத்தின் முன்னோடியாகும். கடம்ப வம்ச ஆட்சியின்போது நடப்பதுபோல் கதைக்களம் உருவாக்கப்பட்டுள்ள இந்தப் படத்தை ஹோம்பலே பிலிம்ஸ் தயாரித்து அக்டோபர் 2, 2025 அன்று வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.