LOADING...
இசைக்குயில் ஆஷா போஸ்லே சிவாஜி கணேசனின் நட்பு பற்றி தெரியுமா? 
நடிகர் திலகத்துடன் ஒரு ஆத்மார்த்தமான நட்பு கொண்டிருந்தார் ஆஷா

இசைக்குயில் ஆஷா போஸ்லே சிவாஜி கணேசனின் நட்பு பற்றி தெரியுமா? 

எழுதியவர் Venkatalakshmi V
Apr 13, 2026
12:58 pm

செய்தி முன்னோட்டம்

பாடகி ஆஷா போஸ்லே தனது 92-வது வயதில் காலமான செய்தி ஒட்டுமொத்த கலை உலகையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மார்புத் தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இயற்கை எய்தினார். ஆஷா போஸ்லே இந்தித் திரையுலகில் ஆயிரக்கணக்கான பாடல்களைப் பாடிப் புகழ் பெற்றவர் என்றாலும், தென்னிந்திய மொழிகளிலும் குறிப்பாக தமிழிலும் தனது காந்தக் குரலால் முத்திரை பதித்துள்ளார். இளையராஜா இசையில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்த 'முதல் மரியாதை' படத்தில் இடம்பெற்ற 'பூங்காற்று திரும்புமா', கமலின் சத்யா படத்தில் 'வலையோசை' போன்ற பாடல்கள் இன்றும் ரசிகர்களின் மனதிற்கு நெருக்கமானவை. சுமார் ஏழு தசாப்தங்களாக இசைத் துறையில் கோலோச்சிய அவருக்குத் திரையுலகத்தினர் ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.

நட்பு

நடிகர் திலகத்துடன் ஒரு ஆத்மார்த்தமான நட்பு

ஆஷா போஸ்லேவுக்கும், நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கும் இடையே ஒரு சகோதரத்துவப் பிணைப்பு இருந்தது. ஒரு பழைய நேர்காணலில் சிவாஜி உடனான தனது நினைவுகளை அவர் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார். "சிவாஜி அண்ணாவை எனது நண்பர் அல்லது சகோதரர் என்று நீங்கள் அழைக்கலாம். நான் அடிக்கடி அவரது வீட்டிற்குச் செல்வேன்; அவர் என்னிடம் ஆங்கிலத்திலும், நான் அவரிடம் இந்தியிலும் உரையாடுவோம்" என்று ஆஷா போஸ்லே குறிப்பிட்டிருந்தார்.

நினைவலை

'என்னம்மா நீ தமிழ்ப் பாடப்போறியா?' - ஒரு சுவாரசியமான நினைவலை

சிவாஜி கணேசன் அடிக்கடி ஆஷா போஸ்லேயைத் தமிழில் கேலி செய்து விளையாடுவாராம். சினிமா எக்ஸ்பிரஸ் வெளியிட்டுள்ள ஒரு செய்தியின்படி, ஒருமுறை ஆஷா போஸ்லே, "நான் எனது முதல் தமிழ்ப் பாடலை உங்களுக்காகப் பாடுவேன்" என்று சொன்னபோது, சிவாஜி சிரித்துக் கொண்டே, "என்னம்மா ஆஷா நீ! உனக்குத் தமிழ் தெரியாதே, எப்படித் தமிழில் பாடுவாய்?" என்று கிண்டல் செய்துள்ளார். ஆனால், பின்னர் அவர் பாடிய பாடலை கேட்டுப் பாராட்டிய சிவாஜியின் அந்த சகோதர பாசத்தை ஆஷா போஸ்லே நினைவு கூர்ந்திருந்தார். ஆஷா போஸ்லேவின் மறைவு இந்திய இசை துறைக்கு ஒரு பேரிழப்பாகக் கருதப்படுகிறது. அவரது குரல் அவர் பாடிய காலத்தால் அழியாத பாடல்கள் மூலம் என்றென்றும் நம்மிடையே வாழ்ந்து கொண்டிருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

Advertisement