உதய்பூரில் கோலாகலத் திருமணம்; ராஷ்மிகா மந்தனா - விஜய் தேவரகொண்டாவின் லீக்கான திருமண கார்டு
செய்தி முன்னோட்டம்
தென்னிந்தியத் திரையுலகின் நட்சத்திர ஜோடிகளான ராஷ்மிகா மந்தனா மற்றும் விஜய் தேவரகொண்டா ஆகியோரது காதல் மற்றும் திருமணம் குறித்த செய்திகள் கடந்த சில மாதங்களாகவே பேசுபொருளாக உள்ளன. இந்நிலையில், வரும் பிப்ரவரி 26 ஆம் தேதி இவர்கள் இருவருக்கும் திருமணம் நடைபெறவுள்ளதாகக் கூறி ஒரு திருமண அழைப்பிதழ் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் உள்ள ஒரு பாரம்பரிய அரண்மனையில் இவர்களது திருமணம் நடைபெறவுள்ளதாக அந்தத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
விவரங்கள்
இணையத்தில் கசிந்த அழைப்பிதழ் விபரங்கள்
சமூக வலைதளங்களில் கசிந்துள்ள தகவல்களின்படி, பிப்ரவரி 26, 2026 அன்று உதய்பூரில் உள்ள ஒரு சொகுசு அரண்மனையில் மிக நெருக்கமான உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் இந்தத் திருமணம் நடைபெற உள்ளது. இதனைத் தொடர்ந்து, மார்ச் 4 ஆம் தேதி ஹைதராபாத்தில் உள்ள தாஜ் கிருஷ்ணா ஓட்டலில் திரைத்துறையினருக்காக ஒரு பிரம்மாண்ட வரவேற்பு நிகழ்ச்சிக்குத் திட்டமிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், இது தொடர்பாக இரு நட்சத்திரங்களும் இன்னும் அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை.
ராஷ்மிகா
நடிகை ராஷ்மிகாவின் ரியாக்ஷன்
சமீபத்தில் விமான நிலையத்தில் பாப்பராசிகளிடம் பேசிய ராஷ்மிகா, திருமணம் குறித்து நேரடியாக எதையும் கூறவில்லை என்றாலும், திருமணத் தேதியை அவர்கள் குறிப்பிட்டபோது புன்னகையுடன் வெட்கப்பட்ட வீடியோ இணையத்தில் வைரலானது. முன்னதாக, அக்டோபர் 2025 இல் ஹைதராபாத்தில் இவர்களது நிச்சயதார்த்தம் ரகசியமாக நடந்ததாகச் செய்திகள் வெளியானது குறிப்பிடத்தக்கது. உதய்பூரில் திருமண வேலைப்பாடுகள் நடக்கும் வீடியோக்கள் சில நாட்களுக்கு முன்பு சமூக வலைதளங்களில் கசிந்ததும் இந்தச் சந்தேகத்தை வலுப்படுத்தியுள்ளது.
திரைப்பயணம்
திரைப்பயணம் மற்றும் திருமண முன்னேற்பாடுகள்
கையிருப்புப் பணிகளை முடித்துவிட்டு பிப்ரவரி இரண்டாவது வாரத்திலிருந்து இருவரும் ஓய்வெடுக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. விஜய் தேவரகொண்டா தற்போது ராகுல் சங்கிருத்தியன் இயக்கத்தில் ஒரு பீரியட் டிராமாவில் நடித்து வருகிறார். ராஷ்மிகா மந்தனா 'தி கேர்ள் பிரண்ட்' படத்தின் வெற்றிக்குப் பிறகு பல முக்கியத் திரைப்படங்களில் பிஸியாக உள்ளார். எவ்வித விளம்பரமும் இன்றி தனிப்பட்ட முறையில் இந்தத் திருமணத்தை நடத்த இருவரும் விரும்புவதாகக் கூறப்படுகிறது.