Loading...
'விஜய் தேவரகொண்டாவுடனான உறவு': ட்ரோல்களுக்கு பதிலடி கொடுத்த ரஷ்மிகா மந்தனா
திருமண வாழ்க்கை விமர்சனங்களுக்கு நடிகை ரஷ்மிகா மந்தனா விளக்கம் அளித்துள்ளார்.

'விஜய் தேவரகொண்டாவுடனான உறவு': ட்ரோல்களுக்கு பதிலடி கொடுத்த ரஷ்மிகா மந்தனா

எழுதியவர் Vasuki
Oct 26, 2026
06:06 pm

செய்தி முன்னோட்டம்

பிரபல பாலிவுட் மற்றும் தென்னிந்திய நடிகை ரஷ்மிகா மந்தனா, தனது கணவரும் நடிகருமான விஜய் தேவரகொண்டாவுடனான காதல் மற்றும் திருமணம் குறித்து இணையத்தில் வெளியாகும் விமர்சனங்களுக்கு விரிவான அறிக்கையின் மூலம் பதிலடி கொடுத்துள்ளார். காஃபி வித் கரண் நிகழ்ச்சியில் இவர்கள் இருவரும் தம்பதியாகப் பங்கேற்ற பின்னர், அவர்களின் திருமண முன்மொழிவு மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து சமூக வலைதளங்களில் கடுமையான விமர்சனங்களும், தேவையற்ற அறிவுரைகளும் முன்வைக்கப்பட்டன. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், தங்கள் வாழ்க்கைத் துணையைத் தாங்களே தேர்வு செய்யும் உரிமை தங்களுக்கு உண்டு என்றும், முன் பின் தெரியாதவர்கள் தங்களது உறவை வரையறுக்க முடியாது என்றும் ரஷ்மிகா தெரிவித்துள்ளார்.

விஜய் உடனான புரிதல்

திருமண அணுகுமுறை

தங்களுக்கு இடையேயான புரிதலை விவரித்த ரஷ்மிகா, "திருமணம் என்பது முழங்காலிட்டு மோதிரம் மாற்றுவது போன்ற அலங்கார நிகழ்வுகளில் மட்டுமே அடங்கிவிடவில்லை; இருவரும் இணைந்து ஒரு நல்ல எதிர்காலத்தைக் கட்டமைப்பதே முக்கியம்".

"விஜய் எப்போதுமே தொலைநோக்குப் பார்வையுடன் யோசித்து முடிவெடுக்கக் கூடியவர்; நான் முழு மனதுடன் உணர்வுப்பூர்வமாக முடிவெடுப்பவள்".

"இருவரிடமும் உள்ள இந்த மாறுபட்ட தன்மையே எங்களது வாழ்க்கையை முழுமையாக்குகிறது. என் கணவர் மீது நான் அளவு கடந்த அன்பும் பித்துமாக இருக்கிறேன், அது எப்போது தவறான ஒன்றானது?"

"எத்தனை முறை வாய்ப்புக் கிடைத்தாலும் 100 முறை அல்ல, ஆயிரம் முறையானாலும் நான் அவரையே என் வாழ்க்கைத் துணையாகத் தேர்ந்தெடுப்பேன்" என்று உருக்கமாகக் குறிப்பிட்டுள்ளார்.

ரஷ்மிகா ஆதங்கம்

பெண்ணியம் என்ற பெயரில் மிரட்டல் கூடாது

விஜய்யைப் பிரியுமாறு அறிவுரை கூறிய பெண்களுக்குப் பதிலளித்த ரஷ்மிகா, "நான் மன அழுத்தம், உடல்நலக் குறைவால் போராடிய கடினமான காலத்தில் நீங்கள் யாரும் என்னுடன் இல்லை; விஜய் மட்டுமே உடனிருந்து காத்தார். தற்போது வாழ்க்கையின் மிக மகிழ்ச்சியான கட்டத்தில் இருக்கிறேன்" என்றார்.

மேலும் குடும்பத்தை விமர்சிப்பதைச் சாடிய அவர், "மற்றவர்களைத் தாழ்த்திப் பேசுவது பெண்ணியமல்ல; அது பெண்ணியம் என்ற போர்வையில் செய்யப்படும் இணைய அச்சுறுத்தல். முடிவெடுக்கும் சுதந்திரமே உண்மையான பெண்ணியம்" எனக் குறிப்பிட்டார்.

தொடர்ந்து, 10 ஆண்டுகளுக்கும் மேலாக அன்பு செலுத்தும் கன்னட ரசிகர்களுக்கும் அவர் உருக்கமாக நன்றி தெரிவித்தார்.

ADVERTISEMENT

ஆதரவு

விஜய் தேவரகொண்டாவின் நெகிழ்ச்சியான பதிவு

ரஷ்மிகாவின் இந்த நீண்ட பதிவைத் தொடர்ந்து, நடிகர் விஜய் தேவரகொண்டாவும் தனது எக்ஸ் பக்கத்தில் நெகிழ்ச்சியான ஒரு குறிப்பைப் பகிர்ந்துள்ளார்.

அதில், "என் சிறந்த தோழி, என் மனைவி, என் பெண்... என் வாழ்க்கையில் நான் சரியாகச் செய்த மிக அழகான விஷயங்களில் அவளும் ஒன்று" என்று குறிப்பிட்டுத் தனது அன்பை வெளிப்படுத்தியுள்ளார்.

வெளியாட்களின் எதிர்மறையான விமர்சனங்களைத் தாண்டி, இருவரும் தங்களது வாழ்க்கைப் பயணத்தை உறுதியுடன் தொடர்வதாகக் கூறி இந்த விவாதங்களுக்கு தம்பதியினர் முற்றுப்புள்ளி வைத்துள்ளனர்.

ADVERTISEMENT