பாலிவுட்டில் நடிகர் ரன்வீர் சிங்கிற்கு ரெட் கார்ட் விதிக்கப்பட்டதன் பின்னணி என்ன?
செய்தி முன்னோட்டம்
பாலிவுட் திரையுலகில் தற்போதைய தேதியில் மிகப்பெரிய விவாதப் பொருளாக மாறியிருப்பது நடிகர் ரன்வீர் சிங் மற்றும் முன்னணி இயக்குநர்/தயாரிப்பாளர் பர்ஹான் அக்தர் இடையேயான 'டான் 3' பட மோதல்தான். கடந்த 2023-ஆம் ஆண்டு அமிதாப் பச்சன், ஷாருக்கான் ஆகியோரைத் தொடர்ந்து புதிய 'டான்' ஆக ரன்வீர் சிங் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டார். ஆனால், படப்பிடிப்பு தொடங்குவதற்கு சில வாரங்களுக்கு முன்பு ரன்வீர் சிங் இந்த பிரம்மாண்ட படத்திலிருந்து திடீரென விலகினார். இந்த விவகாரம் தற்போது விஸ்வரூபம் எடுத்து, ரன்வீர் சிங்கிற்கு எதிராக இந்தியத் திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனம்(FWICE) ஒத்துழையாமை இயக்க தடையை விதித்துள்ளது. மேலும், தயாரிப்பு நிறுவனம் அவருக்கு ₹45 கோடி அபராதம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
விலகல்
ரன்வீர் சிங் 'டான் 3' படத்திலிருந்து விலகியது ஏன்?
திரையுலக வட்டாரங்களின்படி, ரன்வீர் சிங்கிற்கும் இயக்குநர் பர்ஹான் அக்தருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளே இதற்கு முக்கியக் காரணம் என்று கூறப்படுகிறது. இயக்குநர் ஆதித்யா தார் இயக்கத்தில் தான் நடித்த 'Dhurandhar' படம் பெரிய வெற்றியைப் பெற்றதைத் தொடர்ந்து, 'டான் 3' படத்தின் கதாபாத்திரத்தை இன்னும் ஆக்ரோஷமாகவும், வன்முறை நிறைந்ததாகவும், கெட்ட வார்த்தைகள் கொண்ட மாஸ் கதாபாத்திரமாகவும் மாற்ற ரன்வீர் சிங் கோரியுள்ளார். ஆனால், பர்ஹான் அக்தர் தனது அசல் திரைக்கதையை மாற்ற மறுத்துவிட்டார். படத்தின் இறுதி திரைக்கதை தயாராகாததாலும், படப்பிடிப்பு தொடர்ந்து தள்ளிப்போனதாலும் ரன்வீர் சிங் அதிருப்தி அடைந்து, படப்பிடிப்பு தொடங்க 3 வாரங்களே இருந்த நிலையில் படத்திலிருந்து திடீரென விலகியதாகக் கூறப்படுகிறது.
தடை
தொழிலாளர்கள் சம்மேளனம் (FWICE) தடை விதித்தது ஏன்?
தயாரிப்பாளர்கள் பர்ஹான் அக்தர் மற்றும் ரித்தேஷ் சித்வானி ஆகியோர் கடந்த ஏப்ரல் மாதம் ரன்வீர் சிங்கிற்கு எதிராகத் திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனத்தில் (FWICE) புகார் அளித்தனர். "படம் தொடங்குவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு, 200-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களின் வெளிநாட்டுப் பயணம், ஹோட்டல் முன்பதிவுகள் என அனைத்தும் முடிந்த நிலையில் ரன்வீர் சிங் கடைசி நேரத்தில் விலகியுள்ளார்". "இதனால் தயாரிப்பாளர்களுக்கு ₹45 கோடி வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இது ஒட்டுமொத்த சினிமா தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தையும் பாதிக்கும் செயல்" என்று சம்மேளனத்தின் முதன்மை ஆலோசகர் அசோக் பண்டிட் தெரிவித்துள்ளார்.
விளக்கம்
நேரில் விளக்கமளிக்க ரன்வீர் வரவில்லை
இது குறித்து விளக்கம் அளிக்கக் கோரி ரன்வீர் சிங்கிற்கு 3 முறை சம்மேளனம் நோட்டீஸ் அனுப்பியும், அவர் நேரில் ஆஜராகவில்லை. மாறாக, இந்த ஒப்பந்தப் பிரச்சனைகளைப் பேச சம்மேளனம் 'சரியான தளம் அல்ல' என்று ரன்வீர் தரப்பு பதிலளித்துள்ளது. இதனால் கோபமடைந்த FWICE, ரன்வீர் சிங்கிற்கு எதிராக ஒத்துழையாமை உத்தரவைப் பிறப்பித்துள்ளது. இதன் மூலம் லைட்மேன், கேமராமேன், தச்சுத் தொழிலாளர்கள் என 5,000-க்கும் மேற்பட்ட சம்மேளன உறுப்பினர்கள் யாரும் ரன்வீர் சிங்கின் புதிய படங்கள் அல்லது விளம்பரப் படப்பிடிப்புகளில் பணியாற்ற மாட்டார்கள்.
பதில்
"மரியாதையுடன் அமைதி காக்கிறேன்": ரன்வீர் சிங் பதில்
இந்தத் தடை உத்தரவு குறித்து ரன்வீர் சிங்கின் செய்தித் தொடர்பாளர் அதிகாரப்பூர்வ அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். "டான் பிரான்ச்சைஸ் மற்றும் திரைத்துறை மீது ரன்வீர் சிங் எப்போதும் மிகுந்த மதிப்புக் கொண்டுள்ளார். தொழில்முறை கருத்து வேறுபாடுகள் மற்றும் தனிப்பட்ட உறவுகளை முதிர்ச்சியுடனும், பரஸ்பர மரியாதையுடனும், ரகசியமாகவுமே கையாள வேண்டும் என்று அவர் விரும்புகிறார்." "இது குறித்து வெளியாகும் வதந்திகளுக்கும், யூகங்களுக்கும் பொதுவெளியில் பதிலளிக்க அவர் விரும்பவில்லை. அவரது கவனம் முழுவதும் அடுத்தடுத்து வரவிருக்கும் திரைப்படங்கள் மீதே உள்ளது. டான் 3 திரைப்படக் குழுவினருக்கு அவரது வாழ்த்துக்கள் எப்போதும் உண்டு" என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொழிலாளர் சம்மேளனத்தின் தடை காரணமாக ரன்வீர் சிங்கின் திரைப்பயணத்தில் தற்காலிகமாகப் பெரும் முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது.