ராம்- ஜானு ரசிகர்களே! 96 இரண்டாம் பாகம் உருவாகிறது!
பிரேம்குமார் இயக்கத்தில், விஜய் சேதுபதி, திரிஷா நடிப்பில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான '96 திரைப்படத்திற்கு ரசிகர்கள் இல்லாமல் இருக்க முடியாது. அப்படத்திற்கு பின்னர் பிரேம்குமார் இயக்கிய மெய்யழகன் படம் சமீபத்தில் வெளியாகி நல்ல விமர்சனங்களை பெற்றது. அதன் தொடர்ச்சியாக தற்போது '96 படத்தின் சீக்குவல், அதாவது அடுத்த பாகத்தை எடுக்க திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இரண்டாம் பாகத்தில் யார் நடிக்கவுள்ளனர் என்பது குறித்த விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை. இருப்பினும் இந்த படத்தின் திரைக்கதை பணிகள் முடிவடைந்தாகவும், டான் பிக்ச்சர்ஸ் இப்படத்தை தயாரிக்க உள்ளனர் எனவும் இணையத்தில் செய்திகள் கூறுகின்றன. இப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைப்பாளராக இணைவார் எனவும் கூறப்படுகிறது.
Twitter Post
'96 கதைக்களம் மற்றும் நடிகர்கள் விவரங்கள்
பள்ளிகாலத்து காதலர்களான ராம் (விஜய் சேதுபதி) மற்றும் ஜானு (எ) ஜானகி, பல வருடங்கள் கழித்து பள்ளி தோழர்கள் ரீயூனியனில் சந்தித்து கொள்கின்றனர். அப்போது எதிர்பாராதவிதமாக ஜானு- ராம் ஒரு இரவை ஒன்றாக கழிக்கின்றனர். அப்போது அவர்கள் கடந்த கால நினைவுகளை அசைபோடுவதும், அவர்களுக்குள் இருக்கும் மென்மையான காதல் இன்னமும் உயிர்ப்புடன் இருப்பதை அறியும் தருணங்களும் ரசிகர்களை நெகிழ வைத்தது. இப்படியும் காதலை கூறலாம் என புதுவிதமாக முயற்சித்த பிரேம்குமாருக்கு பாராட்டுகளும் விருதுகளும் குவிந்தன. இப்படத்தில் விஜய் சேதுபதியுடன், திரிஷா, தேவதர்ஷினி, கௌரி கிஷன், வர்ஷா பொல்லமா, நியத்தி, ஜனகராஜ் உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர். கௌரவ வேடத்தில் பழம்பெரும் பாடகி ஜானகியும் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.