LOADING...
தனுஷின் 'ஓம்' படத்தில் அண்ணாமலை கேரக்டரா? உண்மையை உடைத்துப் பேசிய இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி
தனுஷின் 'ஓம்' குறித்து இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி விளக்கம்

தனுஷின் 'ஓம்' படத்தில் அண்ணாமலை கேரக்டரா? உண்மையை உடைத்துப் பேசிய இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி

எழுதியவர் Sekar Chinnappan
Jun 19, 2026
01:34 pm

செய்தி முன்னோட்டம்

அமரன் திரைப்படத்தின் பிரம்மாண்டமான உலகளாவிய வெற்றிக்குப் பிறகு, இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷ், மம்மூட்டி, சாய் பல்லவி மற்றும் ஸ்ரீலீலா ஆகிய முன்னணி நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகி வரும் புதிய திரைப்படம் ஓம் (OM). சாய் அபயங்கர் இசையமைப்பில் உருவாகும் இத்திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ டைட்டில் அறிவிப்பு விழா நேற்று கோலாகலமாக நடைபெற்றது. இந்த விழாவில் கலந்துகொண்டு பேசிய இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி, படத்தின் பட்ஜெட், மம்மூட்டியின் கேரக்டர் மற்றும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் திருப்பதி செம்மரக் கடத்தல் உண்மை சம்பவப் பின்னணி குறித்த பல சுவாரசியமான விபரங்களைப் பகிர்ந்து கொண்டார்.

மிகப்பெரிய பட்ஜெட்

தனுஷ் திரையுலக வாழ்க்கையிலேயே மிகப்பெரிய பட்ஜெட் படம்

திரைப்படம் குறித்துப் பேசிய இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி, "ஓம் என்பது ஆன்மிக சம்பந்தப்பட்ட தலைப்பு போலத் தெரிந்தாலும், இது முற்றிலும் ஒரு உணர்வுப்பூர்வமான கதையாகும். படத்தின் தலைப்பிற்கும், கதைக்கும் பல அடுக்கு லேயர்களில் ஆழமான அர்த்தங்கள் ஒளிந்துள்ளன. தற்பொழுது இத்திரைப்படத்தின் 65 சதவீதப் படப்பிடிப்பு வெற்றிகரமாக முடிவடைந்துள்ளது. தனுஷ் இதுவரை நடித்த படங்களிலேயே இந்தத் திரைப்படம் தான் மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாராகி வருகிறது. அதற்குப் படத்தின் முன்னணி நடிகர்கள், பிரம்மாண்டமான கதைக்களம் எனப் பல காரணங்கள் உள்ளன. அத்துடன் தற்போதைய சினிமா பிசினஸும் முன்பை விடப் பல மடங்கு அதிகரித்துள்ளது." என்று பெருமிதத்துடன் தெரிவித்தார்.

6 மாத காத்திருப்பு

6 மாதக் காத்திருப்புக்குப் பிறகு இணைந்த மம்மூட்டி

படத்தில் மற்றொரு நாயகனாக நடிக்கும் மலையாள சூப்பர்ஸ்டார் மம்மூட்டி குறித்துப் பேசிய இயக்குநர், "இப்படத்தில் கார்த்திகேயன் என்ற மிக முக்கியக் கேரக்டரில் மம்மூட்டி நடிக்கிறார். சூழ்நிலை காரணமாக என்னால் 6 மாதங்களாக அவரை சந்திக்க முடியவில்லை. பின்னர் ஒருநாள் சென்னை வந்திருந்த அவர், என்னிடம் முழுக்கதையையும் கேட்டார். அதில் அவருக்கு இருந்த சில நியாயமான சந்தேகங்களைக் கேட்டுத் தெளிவுபடுத்திக் கொண்டவுடன், உடனடியாகப் படத்தில் நடிக்க ஓகே சொல்லிவிட்டார். தனுஷ், மம்மூட்டி என இருவருமே தேசிய விருது பெற்ற சிறந்த நடிகர்கள் என்பதால், தங்களின் கேரக்டர்களை உணர்ந்து மிக அழகாக நடித்துள்ளனர். தற்பொழுது ஸ்ரீலீலா சம்பந்தப்பட்ட காட்சிகளை எடுத்து வருகிறேன். அவர் நடனத்தில் மட்டுமல்லாமல் நடிப்பிலும் சிறந்தவர் என்பதை நிரூபித்துள்ளார்." என்றார்.

Advertisement

உண்மை சம்பவம்

திருப்பதி என்கவுண்டர் உண்மை சம்பவமும் அண்ணாமலை கேரக்டரும்

படம் குறித்த ரசிகர்களின் மிகப்பெரிய சந்தேகத்திற்குப் பதிலளித்த இயக்குநர், "பத்து ஆண்டுகளுக்கு முன்பு திருப்பதியில் நடந்த செம்மரக் கடத்தல் மற்றும் என்கவுண்டர் சம்பந்தப்பட்ட கதையா இது என்று பலரும் கேட்கிறார்கள். டீசரில் நாங்கள் சில விபரங்களைக் காட்டியுள்ளோம். நிச்சயமாக சில உண்மை சம்பவங்கள் மற்றும் அதன் பாதிப்புகளின் அடிப்படையில்தான் இந்த முழு கதையும் உருவாகி இருக்கிறது. படத்தில் தமிழர்களை நாங்கள் எந்த இடத்திலும் தவறாகக் காண்பிக்கவில்லை. திருவண்ணாமலை நகரத்திற்கும் இந்தக் கதைக்கும் மிக நெருங்கிய தொடர்பு இருக்கிறது. ஆனால், தனுஷின் கேரக்டர் பெயர் அண்ணாமலைதானா என்பதை தற்போதைக்கு ரகசியமாகவே வைத்திருக்க விரும்புகிறேன்." என்று கூறினார்.

Advertisement