'தலைவர் 173' அப்டேட்: ரஜினிகாந்தின் மகனாக பசில் ஜோசஃப் நடிக்க ஒப்பந்தம்?
செய்தி முன்னோட்டம்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் அடுத்ததாக உருவாகவுள்ள 'தலைவர் 173' திரைப்படத்தில், அவருக்கு மகனாக நடிக்க மலையாள நடிகர் பசில் ஜோசஃப் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சிவகார்த்திகேயனின் 'டான்' திரைப்படத்தின் மூலம் முத்திரை பதித்த இயக்குநர் சிபி சக்ரவர்த்தி இந்த படத்தை இயக்குகிறார். கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் இந்த பிரம்மாண்டமான படைப்பை தயாரிக்கிறது. இந்தப் படத்தில் கதாநாயகியாக அல்லது ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க நடிகை பிரியங்கா மோகனிடமும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. 'டான்' படத்திற்கு பிறகு சிபி சக்ரவர்த்தியுடன் பிரியங்கா இணையும் இரண்டாவது படமாக இது அமையலாம்.
விவரங்கள்
யார் இந்த பசில்?
மலையாளத்தில் 'மின்னல் முரளி' போன்ற வெற்றி படங்களை இயக்கிய பசில் ஜோசஃப், நடிகராகவும் 'ஜெய ஜெய ஜெய ஹே', 'ஃபேலிமி', 'குருவாயூர் அம்பலநடையில்' போன்ற 50 கோடி வசூல் படங்களை கொடுத்தவர். தமிழில் சிவகார்த்திகேயனின் 'பராசக்தி' படத்தில் சிறிய வேடத்தில் நடித்திருந்தாலும், ரஜினிக்கு மகனாக நடிக்கும் இந்த வாய்ப்பு அவருக்கு தமிழில் ஒரு பெரிய திருப்புமுனையாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்திய நேர்காணல் ஒன்றில் பேசிய ரஜினிகாந்த், இந்தப் படத்தின் படப்பிடிப்பு வரும் ஏப்ரல் மாதத்தில் தொடங்கும் என்றும், இது ஒரு முழுமையான வணிக ரீதியான பொழுதுபோக்குத் திரைப்படமாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார். 2027-ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இப்படம் திரைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.