LOADING...
'படையப்பா 2 விரைவில் எதிர்பார்க்கலாம்': 50 ஆண்டு கொண்டாட்டத்தின்போது மனம் திறந்த சூப்பர்ஸ்டார்

'படையப்பா 2 விரைவில் எதிர்பார்க்கலாம்': 50 ஆண்டு கொண்டாட்டத்தின்போது மனம் திறந்த சூப்பர்ஸ்டார்

எழுதியவர் Venkatalakshmi V
Dec 09, 2025
08:53 am

செய்தி முன்னோட்டம்

நடிகர் ரஜினிகாந்த் திரையுலகில் 50 ஆண்டுகளை நிறைவு செய்ததை ஒட்டி, அவர் நடித்த மாபெரும் வெற்றிப் படமான 'படையப்பா' திரைப்படம் வரும் டிசம்பர் 12-ஆம் தேதி மீண்டும் திரையரங்குகளில் வெளியாகிறது. அன்று அவரது பிறந்தநாள் என்பதால் ரசிகர்களுக்கு அது இரட்டை கொண்டாட்டமாக மாறவுள்ளது. இதனையொட்டி, அந்தப் படம் உருவான ரகசியம் குறித்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மனம் திறந்து பேசியுள்ளார்.

மூலக்கதை

மூலக்கதை உருவான விதம்

தான் உருவாக்கிய 'படையப்பா' படத்தின் மூலக்கதை, கல்கியின் புகழ்பெற்ற பொன்னியின் செல்வன் நாவலில் வரும் நந்தினி கதாபாத்திரத்தின் தன்மையால் உத்வேகம் பெற்றதாக ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். அந்த கதாபாத்திரத்தை மையமாக வைத்து ஒரு முழு நீளத் திரைப்படம் எடுக்க வேண்டும் என்ற எண்ணம் தனக்கு இரண்டு முதல் மூன்று ஆண்டுகளாக இருந்ததாகவும் அவர் கூறியுள்ளார். தான் சினிமாவுக்கு வந்த 21-ஆம் ஆண்டிலேயே, தனது 25-ஆம் ஆண்டில் (1999) வெளியாகும் படத்தை சொந்தமாக தயாரிக்க வேண்டும் என்று திட்டமிட்டதாகவும் அவர் குறிப்பிட்டார். தான் உருவாக்கிய இந்தக் கதையை இயக்குநர் கே.எஸ்.ரவிகுமாரிடம் கூறியதாகவும், அவர் ஏற்றுக்கொண்டு திரைக்கதை மற்றும் வசனங்களை அமைத்ததாகவும் ரஜினி தெரிவித்துள்ளார்.

பெயர்க் காரணம்

பெயர்க் காரணம் மற்றும் இரண்டாம் பாகம் உருவாகும் வாய்ப்பு

படத்தின் தலைப்பு குறித்து யோசித்தபோது, தனக்கே தெரியாமல் 'படையப்பா' என்ற வார்த்தை திடீரென வாயில் இருந்து வந்ததாக ரஜினிகாந்த் கூறியுள்ளார். இதற்கு முன்னரும் அண்ணாமலை, பாட்ஷா, முத்து போன்ற பல படங்களின் தலைப்புகள் அவ்வாறு தோன்றியவையே என்று அவர் நினைவுகூர்ந்தார். தான் அடிக்கடி சந்தித்து ஆன்மீக விஷயங்களைப் பற்றிப் பேசும் தயானந்த சரஸ்வதியிடம் கதையைப் பற்றி கூறியபோது, "படையப்பா என்பது முருகப்பெருமானின் பெயரைக் குறிக்கும், அது ஆறுபடையப்பன் என்று அவர் தெரிவித்ததாக ரஜினிகாந்த் கூறினார். இதே போல, நீலாம்பரி கதாபாத்திரைத்தை அடிப்படையாக கொண்டு இரண்டாம் பாகம் எடுக்கவும் திட்டமிருப்பதாகவும், அதற்கான கதையை தேடி வருவதாகவும் அவர் கூறினார். 2.0, ஜெயிலர் 2 போல படையப்பா 2 உருவாகும் எனவும் நம்பிக்கை தெரிவித்தார்.

Advertisement