அரசியலில் குதிக்கும் ராகவா லாரன்ஸ்! ரஜினி சொன்ன 'ஆல் தி பெஸ்ட்'.. தவெக போன் கால் சஸ்பென்ஸ் உடைத்த அதிரடி பேட்டி!
செய்தி முன்னோட்டம்
தமிழக சட்டமன்றத் தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் ஜோசப் விஜய், தான் போட்டியிட்டு வெற்றி பெற்ற திருச்சி கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பதவியை அண்மையில் ராஜினாமா செய்தார். இதனால் காலியாக உள்ள அந்தத் தொகுதியின் இடைத்தேர்தலில் தவெக சார்பில் நடிகர் ராகவா லாரன்ஸ் போட்டியிடப் போவதாகப் பரவிய தகவல்கள் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. இந்தச் சூழ்நிலையில், சென்னை உத்தண்டியில் உள்ள தனது இல்லத்தில் ஆயிரக்கணக்கான ரசிகர்களை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்திய நடிகர் ராகவா லாரன்ஸ், தனது அதிகாரப்பூர்வ அரசியல் வருகை மற்றும் தவெக கூட்டணி குறித்த முக்கிய விபரங்களைச் செய்தியாளர்களிடம் விரிவாகப் பகிர்ந்துள்ளார்.
திரண்ட ரசிகர்கள்
உத்தண்டி இல்லத்தில் ரசிகர்கள் திரண்டதால் பரப்பரப்பு
சென்னை உத்தண்டியில் உள்ள ராகவா லாரன்ஸின் இல்லத்திற்குத் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் திரளான ரசிகர்கள் மேள தாளங்களுடன் இன்று வருகை தந்து அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். தனது இல்லத்தில் அமைந்துள்ள ராகவேந்திரா ஆலயத்தில் சாமி தரிசனம் செய்த பின்னர் ரசிகர்களுடன் லாரன்ஸ் ஆலோசனை நடத்தினார். தான் அரசியலுக்கு வரலாமா வேண்டாமா என்று சமூக வலைதளத்தில் எழுப்பிய கேள்விக்கு, லட்சக்கணக்கான மக்கள் நேர்மறையான ஆதரவை வழங்கியதாகக் குறிப்பிட்ட லாரன்ஸ், மக்களின் விருப்பத்திற்கேற்ப ஒரு மிகச் சிறந்த நல்ல முடிவை எடுத்துள்ளதாகத் தெரிவித்தார்.
தவெக தொண்டர்கள்
தவெக தொண்டர்கள் தற்குறிகள் அல்ல அம்பு குறிகள்
செய்தியாளர் சந்திப்பில் தவெக தொண்டர்களை விமர்சிப்பவர்களுக்குப் பதிலடி கொடுத்த லாரன்ஸ், அக்கட்சியின் தொண்டர்கள் தற்குறிகள் அல்ல என்றும், அவர்கள்தான் அக்கட்சியின் அம்புக்குறிகள் என்றும் புகழாரம் சூட்டினார். தவெக ஆட்சிப் பொறுப்பேற்று ஒரு மாதமே ஆவதால், புதிய அரசிற்கு மக்கள் போதிய கால அவகாசம் வழங்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். தமிழகத்தில் பள்ளி மற்றும் கோவில்களுக்கு அருகில் உள்ள மதுபானக் கடைகளை மூடிய தவெக அரசின் நடவடிக்கை மற்றும் பள்ளிக்கல்வித் துறை அமைச்சரின் செயல்பாடுகள் மிகவும் சூப்பராக உள்ளதாகவும் லாரன்ஸ் மனதாரப் பாராட்டினார்.
ரஜினிகாந்த் ஆசி
ரஜினிகாந்த் ஆசியும் தவெக போன் கால் சஸ்பென்சும்
தான் எப்போதும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் ஆசியோடு தான் அத்தனை முக்கிய விஷயங்களையும் செய்து வருவதாகவும், தனது அரசியல் முடிவைக் கேட்டு ரஜினி தனக்கு 'ஆல் தி பெஸ்ட்' கூறி வாழ்த்தியதாகவும் லாரன்ஸ் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார். தவெக கட்சியில் இணைவது குறித்த கேள்விக்கு, தனக்கு சில முக்கிய போன் கால்கள் வந்துள்ளது உண்மைதான் என்றும், ஆனால் அதில் இணையப் போகிறேனா என்பது சஸ்பென்ஸ் என்றும் கூறினார். தனது தாயாரை மேடையில் ஏற்றி, விரைவில் ஒரு பிரம்மாண்ட மாநாடு மூலம் முக்கிய அரசியல் அறிவிப்பை வெளியிட உள்ளதாக லாரன்ஸ் அறிவித்துள்ளார்.
மக்கள் சேவை
வெறுப்பு அரசியல் இல்லாத மக்கள் சேவைக்கான வருகை
அரசியலுக்கு வந்த பிறகு தொடர்ந்து நடிப்பதா இல்லையா என்பது குறித்துப் பின்னர் அறிவிப்பேன் என்று கூறிய லாரன்ஸ், தான் பதவிக்கோ அல்லது பணத்திற்கோ ஆசைப்பட்டு அரசியலுக்கு வரவில்லை என்று தெளிவுபடுத்தினார். தன்னை நோக்கி வரும் விமர்சனங்களை எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாகவும், சண்டை போடுவதற்கோ அல்லது வெறுப்பு அரசியல் செய்வதற்கோ தான் வரவில்லை என்றும், மக்களுக்கு நல்லது செய்ய மட்டுமே விரும்புவதாகவும் அவர் கூறினார். தான் இந்த உலகை விட்டு மறையும் போது ஒட்டுமொத்த ஊரே அழும் அளவிற்குத் தூய்மையான மக்கள் சேவையில் ஈடுபடுவதே தனது இறுதி லட்சியம் என்று லாரன்ஸ் உருக்கமாகத் தெரிவித்தார்.