தியேட்டரில் தென்னிந்திய உணவுகள்.. PVR-ன் புதிய முயற்சி!
செய்தி முன்னோட்டம்
இந்தியாவில் தியேட்டர்களில் இடைவேளையின் போது உணவுப் பொருட்களுக்கான ஸ்டால்களில் பாப்கார்ன், கோக் மற்றும் நாச்சோஸ் என வெளிநாட்டு உணவுப் பொருட்கள் தான் வரிசை கட்டி நிற்கும்.
சிலருக்கு அந்த உணவுப் பொருட்களை அவர்களுடைய தேர்வாக இருந்தாலும், பலருக்கு வேறு தேர்வுகள் இல்லாத காரணத்தினாலேயே அதனை வாங்கிச் செல்வார்கள்.
இந்நிலையில், நொய்டாவில் உள்ள தங்களுடைய சூப்பர்ப்ளெக்ஸ் ஒன்றில் தென் இந்திய உணவுப் பொருட்கள் மற்றும் வடநாட்டு சாலையோர உணவுப் பொருட்களையும் திரையரங்கில் அறிமுகப்படுத்தியிருக்கிறது பிவிஆர் ஐநாக்ஸ்.
உத்திரபிரதேசம் நொய்டாவில் உள்ள மால் ஆஃப் இந்தியாவில் ஏழு திரைகள் கொண்ட சூப்பர்ப்ளெக்ஸை புதுப்பித்து கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் கடந்த மாதம் திறந்திருக்கிறது பிவிஆர்.
இந்தியா
புதிய வசதிகள், விதவிதமான உணவுத் தேர்வுகள்!
மீண்டும் திறக்கப்பட்ட இந்த சூப்பர்ப்ளெக்ஸில் லேசர் தொழில்நுட்பத்துடன் கூடி ஐமேக்ஸ், 4DX மற்றும் P(XL) எனப் பல புதிய வசதிகளை அளித்திருக்கிறது பிவிஆர்.
ஒரே நேரத்தில் 1712 பார்வையாளர்களைக் கையாளக்கூடிய இந்த சூப்பர்ப்ளெக்ஸின் சிறப்பம்சமே அதன் ஃபுட் ஸ்டால்கள் தான்.
இந்திய சாலையோர உணவுப் பொருட்காளான சாட் வகைகள், புலாவ், குல்சா, தென்னிந்திய உணவுப் பொருட்களான இட்லி, தோசை, வடை, வெளிநாட்டு உணவுப் பொருட்களான மோமோஸ், நூடுல்ஸ், ரைஸ், ப்ரெஞ்சு பிரைஸ் உள்ளிட்ட பல்வேறு வகையான உணவுப் பொருட்களை இந்த சூப்பர்ப்ளெக்ஸில் வழங்கத் துவங்கியிருக்கிறது பிவிஆர்.
இந்த புதிய வசதிகளுக்கு மக்கள் எப்படி எதிர்வினையாற்றுகிரார்கள் என்பதைப் பொறுத்து, இது மேலும் விரிவாக்கம் செய்யப்படும் எனத் தெரிவித்திருக்கிறார் பிவிஆரின் தலைமை நிர்வாகி மயங்க் திவாரி.