விஜய்யின் 'காட்ஃபாதர்' மறைவு! ஆளுநரைச் சந்தித்த பின் அஞ்சலி செலுத்த செல்வாரா?
செய்தி முன்னோட்டம்
தமிழ் சினிமாவின் முன்னணித் தயாரிப்பாளரும், சூப்பர் குட் ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் நிறுவனருமான ஆர்.பி. சௌத்ரியின் மறைவு, திரைத்துறையில் ஈடுசெய்ய முடியாத இழப்பாகக் கருதப்படுகிறது. விஜய்யின் ஆரம்பகால வளர்ந்து வரும் கட்டத்தில், அவருக்குப் பெரும் திருப்புமுனையை ஏற்படுத்திக் கொடுத்த பல சூப்பர் ஹிட் படங்களை தயாரித்த பெருமை இவரைச் சாரும். விஜய்யின் திரைப்பயணத்தில் 'பூவே உனக்காக' திரைப்படம் ஒரு மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. அதனைத் தொடர்ந்து 'துள்ளாத மனமும் துள்ளும்', 'ஷாஜகான்', 'திருப்பாச்சி' மற்றும் 'ஜில்லா' என விஜய்யை வைத்துப் பல வெற்றிப் படங்களைத் தயாரித்தவர் ஆர்.பி. சௌத்ரி. விஜய்யின் மீது மிகுந்த நம்பிக்கையும் பாசமும் கொண்ட ஒரு தயாரிப்பாளராக அவர் எப்போதும் திகழ்ந்தார்.
அஞ்சலி
ஆளுநரைச் சந்தித்த பின் அஞ்சலி?
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, ஆட்சி அமைக்க உரிமை கோருவதற்காக இன்று மாலை 3:30 மணிக்குத் தமிழக ஆளுநரைச் சந்தித்துள்ளார் விஜய். இந்தச் சந்திப்பு முடிந்தவுடன், அவர் ஆர்.பி. சௌத்ரி உடலுக்கு அஞ்சலி செலுத்தச் செல்வார் எனத் தவெக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆர்.பி. சௌத்ரி மறைவுக்கு ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட முன்னணி நடிகர்களும், இயக்குநர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக, அவரது மகன்களான நடிகர் ஜீவா மற்றும் ரமேஷ் ஆகியோருக்குத் தங்களது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்து வருகின்றனர்.