70வது தேசிய திரைப்பட விருது: சிறந்த தமிழ் திரைப்படமாக பொன்னியின் செல்வன் தேர்வு
புதுடெல்லியில் உள்ள தேசிய ஊடக மையத்தில் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 16) 70வது தேசிய திரைப்பட விருதுகளின் வெற்றியாளர்கள் மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சகத்தால் அறிவிக்கப்பட்டனர். இதில் சிறந்த தமிழ் மொழிப் படமாக பொன்னியின் செல்வன் பாகம் 1 தேர்வு செய்யப்பட்டுள்ளது. எழுத்தாளர் கல்கியின் வரலாற்றுப் புதினமான பொன்னியின் செல்வன் படத்தை இயக்குனர் மணிரத்னம் இரண்டு பாகங்களாக இயக்கி வெளியிட்டார். மிகப்பெரும் நட்சத்திர பட்டாளங்கள் நடித்த இந்த படத்தின் முதல் பாகம் 2022இல் வெளியானது. இந்நிலையில், இந்த படத்தின் முதல் பாகம் சிறந்த தமிழ் படமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. மேலும், இந்த படத்திற்காக ஏஆர் ரஹ்மானுக்கு சிறந்த பின்னணி இசைக்கான விருது, சிறந்த ஒலி வடிவமைப்பு மற்றும் ஒளிப்பதிவிற்கான விருதுகளையும் வென்றுள்ளது.