இயக்குநர் லோகேஷ் கனகராஜுக்கு உளவியல் பரிசோதனை செய்யக்கோரி உயர்நீதிமன்றத்தில் மனு
செய்தி முன்னோட்டம்
இயக்குநர் லோகேஷ் கனகராஜுக்கு உளவியல் பரிசோதனை செய்யக்கோரியும், லியோ திரைப்படத்தை அனைத்து ஊடகங்களில் இருந்து தடை செய்ய உத்தரவிடக்கோரியும் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மதுரையைச் சேர்ந்த ராஜு முருகன் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், லியோ படம் பெரும்பான்மையான காட்சிகளில், வன்முறையையும், போதை மருந்தையும், பெண் குழந்தைகளை கொல்ல வேண்டும் என்பது போல எடுக்கப்பட்டு இருப்பதாகவும்,
மதம் தொடர்பான சின்னங்களை பயன்படுத்தி முரணான கருத்துக்களையும், லோகேஷ் கனகராஜ் காட்சிப்படுத்தியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
2nd card
லியோ திரைப்படத்தை பார்த்து மன உளைச்சல்
மேலும் அந்த மனுவில், போதை பொருள் விற்பனை, துப்பாக்கி பயன்பாடு மற்றும் காவல்துறை உதவியுடன் அனைத்து சட்டவிரோத செயல்களையும் செய்யலாம் என்ற சமூகவிரோத கருத்துக்களை இயக்குநர் காட்சிப்படுத்தியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இதுபோன்ற திரைப்படங்களை தணிக்கை துறையினர் முறையாக தணிக்கை செய்திட வேண்டும் எனவும், இயக்குனரின் மனநிலையை உளவியலாளர் பரிசோதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ராஜூ முருகன் அந்த மனுவில் கேட்டுள்ளார்.
மேலும் இந்திய தண்டனை சட்டத்தின்படி முறையாக வழக்கு பதிவு செய்யக் கோரியும், லியோ திரைப்படத்தை பார்த்து மன உளைச்சல் அடைந்ததால் தனக்கு ₹1,000 வழங்கிட வேண்டும் எனவும் அவர் கேட்டுள்ளார்.
வன்முறை காட்சிகள் அதிகம் உள்ளதால் அனைத்து ஊடகங்களும் லியோ படத்தை ஒளிபரப்புவதற்கு தடை விதிக்க வேண்டும் எனவும் மனுவில் கோரப்பட்டுள்ளது.
3rd card
லோகேஷ் தரப்பில் வழக்கறிஞர் ஆஜராகாததால் விசாரணை ஒத்திவைப்பு
இந்த மனு நீதிபதிகள் கிருஷ்ணகுமார், விஜயகுமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது, லோகேஷ் கனகராஜ் சார்பில் வழக்கறிஞர் ஆஜராகாததால், விசாரணையை வேறு தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
லியோ திரைப்படம் அறிவிக்கப்பட்டது முதல் வெளியாகும் வரை, பல்வேறு பிரச்சனைகள் தொடர்ந்து அப்படத்தை சுற்றி வந்த நிலையில், படம் வெளியான பிறகும் தற்போது படத்தின் இயக்குனர் மற்றும் படம் மீது உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.