ஆசிய உள்ளடக்க செலவினங்களை 15% அதிகரிக்க நெட்ஃபிலிக்ஸ் திட்டம்
இந்த ஆண்டு, ஆசியா பிராந்தியத்தில், தனது நிலையில் அபரிமிதமான வளர்ச்சியை கண்ட OTT நிறுவனமான Netflix, இந்தஆண்டில் தனது ஆசியா உள்ளடக்க செலவினங்களை 15% அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மீடியா பார்ட்னர்ஸ் ஆசியாவின் அறிக்கையின்படி, ஆசிய-பசிபிக் பிராந்திய வருவாய் இந்த ஆண்டு 12% அதிகரித்துள்ளது. 2022இல் 9% வளர்ச்சியுடன் ஒப்பிடும்போது, இந்தாண்டின் வருவாய் மட்டுமே, $4 பில்லியன் அளவிற்கு உயர்ந்துள்ளது. இதனால், Netflix நிறுவனம் இந்த முடிவை எடுத்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. சமீபத்தில்கூட, தமிழ் நெட்ஃபிலிக்ஸ், #netflixpandigai என்ற ஹாஷ்டேக் மூலம், இதற்கான வேலையை துவங்கிவிட்டதாக தெரிகிறது. சென்ற மாதம், இந்த ஹாஷ்டேக் கொண்டு, பல படங்களையும், சீரிஸ்களையும் அறிமுகப்படுத்தியது இந்நிறுவனம். அதேபோல, மற்ற பிராந்திய மொழிகளிலும், படங்களை வாங்கி குவித்தது.
ஆசியாவில் நெட்ஃபிளிக்ஸின் முக்கிய சந்தை ஜப்பான்
சிங்கப்பூரை தளமாகக் கொண்ட Netflix நிறுவனத்தின், ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு துறை, ஆஸ்திரேலிய சந்தையில் இந்நிறுவனம், மீண்டும் எழுச்சி பெறுவதால் தான் இந்த முன்னேற்றம் என்பதை வெளிப்படுத்தியது. நெட்ஃபிலிக்ஸ் ஆசியா நிறுவனத்தின் முக்கிய நாடுகளாக, ஜப்பான், தென் கொரியா, இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ், தாய்லாந்து மற்றும் இந்தியா கருதப்படுகிறது. MPA நிர்வாக இயக்குனர் விவேக் குடோ கூறுகையில், "மூன்று APAC சந்தைகளில், விளம்பர அடுக்கு மெதுவான தொடக்கத்தைக் கண்டுள்ளது. இருப்பினும், ஆஸ்திரேலியா 2023 ஆம் ஆண்டில் அதிக வேகத்தைக் காணும் என்று எதிர்பார்க்கப்படுகிறது." எனத்தெரிவித்தார். ஆசியாவின் அடுத்த பெரிய பொருளாதாரமாக கருதப்படுவது ஜப்பானை தான். எனவே இந்நாட்டில், தனது இருப்பை கூட, இந்த OTT நிறுவனம் ஆவண செய்யும் எனக்கூறப்படுகிறது.