தேசிய சினிமா தினத்தை முன்னிட்டு வெறும் ₹99 சினிமா பார்க்கலாம்- எப்படி தெரியுமா?
அக்டோபர் 13 ஆம் தேதி இந்தியா முழுவதும் தேசிய சினிமா தினம் கொண்டாடப்படுவதை முன்னிட்டு, அன்று ஒரு நாள் மட்டும் மல்டிபிளக்ஸ்களில் சினிமா பார்க்க கட்டணம் ₹99 ஆக நிர்ணயப்பட்டுள்ளது. 'மல்டிபிளக்ஸ் அசோசியேசன் ஆப் இந்தியா' சார்பில் கடந்த ஆண்டு முதல் தேசிய சினிமா தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு செப்டம்பர் 16 ஆம் தேதி தேசிய சினிமா தினம் கொண்டாடப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அக்டோபர் 13 ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது. கடந்த வருடம் செப்டம்பர் 23 ஆம் தேதி அன்று கொண்டாடப்பட்ட தேசிய சினிமா தினத்தன்று, சுமார் 65 லட்சம் பேர் திரையரங்குகளில் திரைப்படம் பார்த்து மகிழ்ந்தனர்.
பிவிஆர், சினிபோலிஸ், மிராஜ் உள்ளிட்ட முன்னணி நிறுவனங்கள் பங்கேற்கின்றன
தேசிய சினிமா தின கொண்டாட்டத்தில் பிவிஆர், சினிபோலிஸ், மிராஜ் உள்ளிட்ட முன்னணி நிறுவனங்களின் இணைந்து பங்கேற்கின்றன. மேலும் 4,000 திரைகள் இந்த கொண்டாட்டத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ளது. ரசிகர்கள் தங்கள் வழக்கமாக டிக்கெட் முன்பதிவு செய்யும் செயலிகளான புக்மைஷோ, பேடிஎம் உள்ளிட்ட செயலிகளில் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம். சினிமா ரசிகர்கள் ₹99 செலவில் தங்கள் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளலாம். இந்த சலுகை பிரீமியம் வகை திரைகளுக்கு பொருந்தாது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் திரையரங்குகளில் படம் பார்ப்பவர்களுக்கு மல்டிபிளக்ஸ் அசோசியேசன் ஆப் இந்தியா அமைப்பு சார்பில் நெஞ்சார்ந்த நன்றிகளை அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருந்தனர்.