தேசிய விருது பெற்ற திரைப்பட இயக்குநர் ஆர்.சரத் காலமானார்: திரையுலகம் இரங்கல்
செய்தி முன்னோட்டம்
மலையாளத் திரையுலகின் பிரபல இயக்குநரும், திரைக்கதை ஆசிரியரும், கலாச்சார நிர்வாகியுமான ஆர்.சரத் (65) செப்டம்பர் 7 ஆம் தேதி திருவனந்தபுரத்தில் காலமானார். சிறுநீரகக் கோளாறு காரணமாகத் திருவனந்தபுரத்தில் உள்ள கிம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், திங்கட்கிழமை (செப்டம்பர் 7) அதிகாலை அவரது உயிர் பிரிந்தது. கேரளாவின் கொல்லம் மாவட்டத்தில் உள்ள புனலூர் பகுதியை சேர்ந்த இவர், திரைப்படத் துறை மட்டுமின்றிக் கலாச்சாரம் மற்றும் அரசுத் துறைகளிலும் பல்வேறு முத்திரைகளைப் பதித்தவர் ஆவார்.
சர்வதேச அங்கீகாரம்
சாயாஹ்னம் திரைப்படமும் சர்வதேச அங்கீகாரமும்
கடந்த 2000 ஆம் ஆண்டு வெளியான சாயாஹ்னம் திரைப்படத்தின் மூலம் இயக்குநராகவும் திரைக்கதை ஆசிரியராகவும் அறிமுகமானார்.
இவரின் முதல் படமே 7 கேரளா மாநிலத் திரைப்பட விருதுகளையும், சிறந்த அறிமுக இயக்குநருக்கான இந்திரா காந்தி தேசிய திரைப்பட விருதையும் தட்டிச் சென்றது.
இதைத் தொடர்ந்து இவர் இயக்கிய ஸ்திதி, ஷீலாவதி மற்றும் இந்திய-சீன இணை தயாரிப்பான தி டிசையர் உள்ளிட்ட திரைப்படங்கள் பல்வேறு சர்வதேசத் திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டுப் பல விருதுகளை வென்றன.
ராஜா ரவி வர்மா
ராஜா ரவி வர்மாவின் அபூர்வ சுவரோவியங்கள் கண்டுபிடிப்பு
திரைப்படப் பணிகள் தவிர்த்து, கலை ஆராய்ச்சி மற்றும் வரலாற்றுப் பாதுகாப்பிலும் ஆர். சரத் தீவிரமாக ஈடுபட்டு வந்தார்.
தி பெயிண்டட் எபிக்ஸ் என்ற சர்வதேசப் புகழ்பெற்ற ஆவணப்படத்திற்காக பணியாற்றிய போது, கிளுனூர் கோயிலில் மறைந்திருந்த ஓவியர் ராஜா ரவி வர்மாவின் அரிதான சுவரோவியங்களை இவர் கண்டறிந்தார்.
சுவரோவியங்கள் குறித்த இவரது சிறப்பான ஆராய்ச்சிக்காக கடந்த 1996 ஆம் ஆண்டு இந்திய அரசின் கலாச்சாரத் துறையிடமிருந்து ஜூனியர் ஃபெலோஷிப் விருதைப் பெற்றார்.
இவர் தனது கலைப் பயணத்தில் 9 சர்வதேச விருதுகள் மற்றும் தேசிய, மாநில விருதுகளைப் பெற்றுள்ளார்.
அரசு நிர்வாகப் பணிகள்
அரசு நிர்வாகப் பணிகளும் திரையுலகப் பங்களிப்பும்
ஆங்கில இலக்கியத்தில் முதுகலைப் பட்டம் பெற்ற இவர், இதழியல் மற்றும் திரைப்படத் தயாரிப்பில் முறையான பயிற்சி பெற்றவர்.
கேரள அரசின் தகவல் மற்றும் மக்கள் தொடர்புத் துறையில் துணை இயக்குநராகவும், பாரத் பவனின் செயலாளராகவும் பணியாற்றி அம்மாநிலத்தின் கலாச்சார நடவடிக்கைகளுக்குப் பெரும் பங்காற்றினார்.
சினிமா, இதழியல், கலாச்சார ஆராய்ச்சி மற்றும் நிர்வாகம் எனப் பல துறைகளில் தடம் பதித்த இயக்குநர் ஆர்.சரத்தின் மறைவு மலையாளத் திரையுலகிற்கும் கலைத்துறைக்கும் ஈடுசெய்ய முடியாத இழப்பாகும்.