சினிமா உலகில் அடுத்த சோகம்: 'டூலெட்' பட இயக்குநர் செழியன் திடீர் மரணம்
செய்தி முன்னோட்டம்
தமிழ் சினிமாவின் முன்னணி ஒளிப்பதிவாளரும், தேசிய விருது பெற்ற பிரபல இயக்குநருமான இரா.செழியன், உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் இன்று அதிகாலை காலமானார். அவருக்கு வயது 56. இவரது மறைவுச் செய்தி தமிழ் திரையுலகினர் மற்றும் மறைந்த இயக்குநரின் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தை பூர்வீகமாகக் கொண்ட செழியன், கடந்த சில நாட்களாக கடுமையான உடல்நல குறைபாடுகளால் பாதிக்கப்பட்டுச் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று அதிகாலை சுமார் 5 மணி அளவில் சிகிச்சை பலனின்றி அவர் உயிர் பிரிந்தது.
படைப்புகள்
ஒளிப்பதிவில் முத்திரை பதித்த படைப்புகள்
இயக்குநர் பி.சி.ஸ்ரீராமிடம் உதவி ஒளிப்பதிவாளராக தன் திரைப்பயணத்தை தொடங்கிய செழியன், யதார்த்தமான காட்சி பதிவுகளுக்கு பெயர் பெற்றவர். வசந்தபாலன் இயக்கத்தில் வெளியான 'கல்லூரி', சீனு ராமசாமியின் 'தென்மேற்கு பருவக்காற்று', மற்றும் பாலா இயக்கத்தில் உருவான 'பரதேசி', 'தாரை தப்பட்டை' உள்ளிட்ட பல முக்கிய மற்றும் வெற்றித் திரைப்படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றி தனது திறமையை நிரூபித்தவர். ஒளிப்பதிவைத் தாண்டி எழுத்து மற்றும் இயக்கத்திலும் ஆர்வம் கொண்ட செழியன், கடந்த 2017-ஆம் ஆண்டு சாமானிய மக்களின் வீட்டு வாடகைச் சிக்கல்களை மையமாக வைத்து 'டூலெட்' என்ற திரைப்படத்தை எழுதி, இயக்கி, ஒளிப்பதிவும் செய்திருந்தார். சர்வதேச அளவில் பல திரைப்பட விழாக்களில் பாராட்டுகளை பெற்ற இத்திரைப்படம், சிறந்த பிராந்திய மொழித் திரைப்படத்திற்கான தேசிய விருதையும் வென்றது.