சமந்தா விவகாரம்: அமைச்சர் கருத்திற்கு எதிராக ஒன்று கூடிய தெலுங்கு திரையுலகம்
தெலுங்கானா காங்கிரஸ் அமைச்சர் சுரேகா நேற்று தெலுங்கு திரையுலகம் பற்றியும், பாரத ரக்ஷா சமிதி (பிஆர்எஸ்) தலைவர் கேடி ராமராவ் அவர்களை மிரட்டி வைப்பதாகவும் கூறினார். அதன் தொடர்ச்சியாக நடிகை சமந்தா, நடிகர் நாக சைதன்யா திருமண விவாகரத்து பற்றியும் அவதூறாக பேசினார். அவர்கள் விவாகரத்திற்கும் காரணம் KTR தான் எனக்கூறினார். இவரின் இந்த கருத்தினை பற்றி நேற்றே நடிகர் நாகார்ஜூனா கண்டனம் தெரிவித்து, விவாகரத்து என்பது அவர்கள் தனிப்பட்ட விஷயம் என்றும், அதில் தலையிடுவது அநாகரீகம் எனவும் தெரிவித்தார். நேற்று இரவு இந்த விவகாரத்தில் சமந்தாவும், நாகசைதன்யாவும் தங்கள் காட்டமான பதில்களை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டனர். இந்த நிலையில் தெலுங்கு படவுலகினர் பலரும் இந்த விவகாரத்தில் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.
நடிகர் நானி கண்டனங்களை பதிவிட்டுள்ளார்
நடிகர் நானி இந்த விவகாரம் குறித்து பேசுகையில், அரசியல்வாதிகள் என்ற பெயரில் யார் வேண்டுமானாலும் எது வேண்டுமானாலும் பேசி தப்பிக்கலாம் என்ற நினைப்பில் இருப்பவர்களை பார்த்தாலே அருவருப்பாக உள்ளது என கடுமையாக பேசினார். "உங்கள் வார்த்தைகள் மிகவும் பொறுப்பற்றதாக இருக்கும்போது, உங்கள் மக்களுக்காக உங்களுக்கு ஏதேனும் பொறுப்பு இருக்கும் என்று எதிர்பார்ப்பது எங்கள் முட்டாள்தனம்" என்றார். "இவ்வளவு மரியாதைக்குரிய பதவியில் இருப்பவர் ஊடகங்களுக்கு முன்னால் இப்படி அடிப்படை ஆதாரமற்ற குப்பைகளைப் பேசுவதும் சரி என்று நினைப்பதும் சரியல்ல. நமது சமூகத்தை மோசமாகப் பிரதிபலிக்கும் இத்தகைய செயலை நாம் அனைவரும் கண்டிக்க வேண்டும்" எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
நடிகர் நானி கண்டனம்
அல்லு அர்ஜுன், சிரஞ்சீவி உள்ளிட்டவர்கள் அமைச்சரின் கருத்துக்கு கண்டனம்
தன்னுடைய சக நடிகர்கள் மீதும், தெலுங்கு திரையுலகினர் மீதும் சுரேகா கூறிய அவதூறு கருத்துகளுக்கு நடிகர் சிரஞ்சீவி கடுமையான எதிர்ப்பினை தெரிவித்தார். "மதிப்பிற்குரிய பெண் அமைச்சர் ஒருவரின் இழிவான கருத்துக்களைக் கண்டு நான் மிகவும் வேதனையடைந்தேன். பிரபலங்கள் மற்றும் திரைப்பட சகோதரத்துவ உறுப்பினர்கள் உடனடி அணுகலையும் கவனத்தையும் வழங்குவதால் மென்மையான இலக்குகளாக மாறுவது வெட்கக்கேடானது. திரைப்படத் துறையினராகிய நாங்கள் எங்கள் உறுப்பினர்கள் மீதான இத்தகைய மோசமான வார்த்தைத் தாக்குதல்களை எதிர்ப்பதில் ஒன்றுபட்டு நிற்கிறோம்." என்றார். "சம்பந்தப்பட்ட தரப்பினர் மிகவும் பொறுப்புடன் செயல்படவும், குறிப்பாக பெண்களிடம் தனிப்பட்ட தனியுரிமையை மதிக்கவும் கேட்டுக்கொள்கிறேன்" என சமந்தா விவாகரத்து குறித்து அமைச்சர் பேசியதற்கு அல்லு அர்ஜுன் கண்டனங்களை பதிவிட்டார்.