70வது தேசிய திரைப்பட விருது விழா: குடியரசுத் தலைவரிடம் இருந்து தேசிய விருதைப் பெற்றார் ஏஆர் ரஹ்மான்
மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் முதல் பாகத்திற்காக 70வது தேசிய திரைப்பட விருதுகளில் சிறந்த இசையமைப்பாளர் (பின்னணி இசை) விருதைப் பெற்ற இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான் செவ்வாயன்று (அக்டோபர் 8) குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடம் இருந்து விருதை வென்றார். இது அவருக்கு ஏழாவது தேசிய திரைப்பட விருதாகும். டெல்லியில் உள்ள விக்யான் பவனில் நடைபெற்ற 70வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, ஏஆர் ரஹ்மானுக்கு மதிப்புமிக்க விருதை வழங்கினார். விருதைப் பெற்றதும், ரஹ்மான் ஏஎன்ஐ உடனான ஒரு நேர்காணலில் தனது உணர்வுகளைப் பகிர்ந்து கொண்டார். அதில் மணிரத்னத்துடன் பணிபுரியும் ஒவ்வொரு முறையும் சிறந்ததை வெளிப்படுத்துவது சிறப்பு என்று கூறினார்.
மணிரத்னத்துடன் பணியாற்றுவது குறித்து ஏஆர் ரஹ்மான் பேச்சு
விருது வென்ற பிறகு பேசிய ஏஆர் ரஹ்மான், "இந்த விருது எனக்கு ஏழாவது தேசிய விருது என்பதால் சிறப்பு. எனக்கு மணிரத்னத்துடன் பணியாற்றிய ரோஜா படத்திற்காக முதல் தேசிய விருது கிடைத்தது. இந்தப் படமும் அவருடன்தான். நான் அவருடன் பணிபுரியும் போதெல்லாம் அது மிகவும் சிறப்பு வாய்ந்தது, அவர் எங்கள் அனைவரிடமிருந்தும் சிறந்ததைப் பெறுகிறார். மேலும் இது தேசிய விருது என்பதால் நான் மிகவும் பெருமைப்படுகிறேன்." என்றார். மணிரத்னம் இயக்கத்தில் தயாரான பொன்னியின் செல்வன் படத்தில் நடிகர்கள் விக்ரம், த்ரிஷா, கார்த்திக், ஜெயம் ரவி மற்றும் ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட பலரும் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். இது எழுத்தாளர் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை அடிப்படையாகக் கொண்டது.