ரஷ்யா-உக்ரைன் மீட்புப் போரை மையப்படுத்திய கதை! மோகன்லாலின் புதிய படம் ஆபரேஷன் கங்கா அறிவிப்பு; விஷ்ணு மோகன் இயக்கம்
செய்தி முன்னோட்டம்
மலையாளத் திரையுலகின் முன்னணி நட்சத்திரமான மோகன்லால் நடிக்கும் 367வது திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ தலைப்பு வெளியிடப்பட்டுள்ளது. தற்காலிகமாக L367 என அழைக்கப்பட்டு வந்த இப்படத்திற்கு ஆபரேஷன் கங்கா எனப் பெயரிடப்பட்டுள்ளது. தேசிய விருது பெற்ற பிரபல இயக்குனர் விஷ்ணு மோகன் இயக்கும் இப்படத்தை ஸ்ரீ கோகுலம் மூவிஸ் நிறுவனம் சார்பில் கோகுலம் கோபாலன் மிகவும் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்து வருகிறார்.
பின்னணி
ரஷ்யா-உக்ரைன் மீட்புப் போரின் பின்னணி
ரஷ்யா - உக்ரைன் போரின் போது இந்தியர்களை மீட்க இந்திய அரசு நடத்திய ஆபரேஷன் கங்கா மீட்புப் பணியை மையமாகக் கொண்டு இந்த திரைப்படம் உருவாக்கப்படுகிறது.
போலந்து, ஜார்ஜியா, கஜகஸ்தான், டெல்லி, டேராடூன் மற்றும் கொச்சி ஆகிய உலகளாவிய பல இடங்களில் 180 நாட்கள் வரை இதன் படப்பிடிப்பு திட்டமிடப்பட்டுள்ளது.
ஜார்ஜியாவில் இப்படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு தற்போது தொடங்கி நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
நடிகர்கள்
பல்வேறு மொழி நட்சத்திரங்களின் கூட்டணி
இப்படத்தில் மோகன்லாலுடன் இணைந்து பாலிவுட் நட்சத்திரங்களான அர்ஜுன் ராம்பால், அதில் ஹுசைன், பாக்யஸ்ரீ போர்ஸ் மற்றும் தமிழ் நடிகர் பார்த்திபன் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
மேலும் புஷ்பா திரைப்படப் புகழ் ஒளிப்பதிவாளர் மிரோஸ்லாவ் கூபா புரோசெக் ஒளிப்பதிவு செய்ய, சாஸ்வத் சச்தேவ் இசையமைக்கிறார்.
சர்வதேசத் தரம் வாய்ந்த தொழில்நுட்பக் கலைஞர்கள் இப்படத்திற்காகக் கை கோர்த்துள்ளனர்.
அடுத்த படங்கள்
மோகன்லாலின் அடுத்தடுத்த மெகா திட்டங்கள்
மோகன்லால் தற்போது தருண் மூர்த்தி இயக்கத்தில் உருவாகி வந்த அதிமனோஹரம் படப்பிடிப்பை வெற்றிகரமாக முடித்துள்ளார்.
மேலும் ரஜினிகாந்துடன் ஜெய்லர் 2 படத்தில் சிறப்புத் தோற்றத்திலும், திலீஷ் போத்தன் இயக்கத்தில் நெடுங்கண்டம் மிராக்கிள் திரைப்படத்திலும் அவர் கமிட்டாகியுள்ளார்.
இதன் தொடர்ச்சியாக வெளியாகியுள்ள ஆபரேஷன் கங்கா அறிவிப்பு அவரது ரசிகர்களிடையே மாபெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.