மருத்துவம்: நிமோனியா என்றால் என்ன? அதன் காரணங்கள், அறிகுறிகள் மற்றும் சிகிச்சை முறைகள்
நிமோனியா என்பது ஒருவித தீவிரமான நோய் தொற்றாகும். இது, கைக்குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை யாருக்கும் வரலாம். சரியான நேரத்தில் கவனிக்க தவறினால், மரணம் கூட சம்பவிக்கலாம். நுரையீரலை பாதிக்கும் இத்தகைய தீவிர தொற்று பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை: நிமோனியா என்பது பாக்டீரியா, வைரஸ்கள் அல்லது பூஞ்சைகளால் ஏற்படும் தொற்று ஆகும். இந்த தொற்று, உங்கள் நுரையீரலில் இருக்கும் திசுக்களை வீங்க செய்து, சீழ் அல்லது திரவத்தால் நிரப்பும்.இது நுரையீரலை முழுவதுமாக ஆக்ரமித்து விட்டால், நுரையீரல் மாற்று சிகிச்சை தேவைப்படும். வைரஸ் பாக்டீரியா தவிர, நீண்ட நாள் ஜலதோஷம், கோவிட்-19, காய்ச்சல், லெஜியோனேயர்ஸ் நோய் மற்றும் நிமோகோகல் நோய் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டு இருந்தாலும், உங்களை நிமோனியா தாக்கும்.
தனிப்பட்ட சுகாதாரத்தை பேணவும்
நிமோனியா ஒரு தொற்று நோய் அல்ல. எனினும், தும்மல், இருமலால் காற்றில் பரவும் பாக்டீரியாக்கள் மூலம் தொற்று பரவ வாய்ப்பு இருக்கிறது. 105-டிகிரி பாரன்ஹீட் வரை அதிக காய்ச்சல், மஞ்சள், பச்சை அல்லது இரத்தம் தோய்ந்த சளியுடன் இருமல், இரும்பும் போது வயிற்று வலி, சோர்வு, விரைவான சுவாசம் போன்றவை நிமோனியா பாதித்ததற்கான அறிகுறிகள். உரிய நேரத்தில் மருத்துவரை அணுகி, நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகள் உட்கொள்ளுவதன் மூலம் தீர்வு பெறலாம். கூடவே, தடுப்பூசி மற்றும் கைகளை அடிக்கடி கழுவுதல் போன்ற தனிப்பட்ட சுகாதார நடவடிக்கைகள் மூலம் நிமோனியா தொற்றை தடுக்கலாம். உடற்பயிற்சிகளில் ஈடுபடுவதன் மூலமும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கலாம். நிமோனியா பாதிக்கப்பட்டவருடன் நெருங்கிய தொடர்பு மற்றும் பொருட்களைப் பகிர்வதைத் தவிர்க்கவும்.