முன்னாள் சபாநாயகர் தனபால் வாழ்க்கையினை தழுவிய படம் மாமன்னன் - இயக்குநர் பதில்
மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ், வடிவேலு, பகத் பாசில் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் நடித்து நேற்று(ஜூன்.,29) வெளியான படம் தான் 'மாமன்னன்'. இப்படம் முழுக்க முழுக்க சமூக நீதிகள் குறித்து விவாதிக்கப்படும் படமாக எடுக்கப்பட்டுள்ளது என்று செய்திகள் தெரிவிக்கிறது. இந்நிலையில் இப்படத்தினை இயக்குநர் மாரி செல்வராஜ், உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ் ஆகியோர் சென்னை ராயப்பேட்டையில் உள்ள சத்யம் திரையரங்கில் மக்களோடு இணைந்து பார்த்துள்ளனர். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளனர். அப்போது கீர்த்தி சுரேஷ், "இப்படம் பல நல்ல முன்னெடுப்புகளுக்கு துவக்கமாக அமையும்" என்று கூறினார்.
ஜெயலலிதா அம்மாவின் தீவிர விசுவாசி நான் - முன்னாள் சபாநாயகர் ட்விட்டரில் பதிவு
இதனை தொடர்ந்து இப்படத்தில் வடிவேலு கதாபாத்திரம் முன்னாள் சபாநாயகர் தனபாலலின் வாழ்க்கையினை தழுவி எடுக்கப்பட்டதா? என்ற கேள்விக்கு பதிலளித்த மாரி செல்வராஜ், "அதனை மக்கள் முடிவு செய்வார்கள்" என்று கூறியுள்ளார். இந்த படத்தினை பார்த்த ரசிகர்கள், வடிவேல் கதாபாத்திரம் சபாநாயகர் தனபால் அவர்களை ஒப்பிட்டு எடுக்கப்பட்டுள்ளதாகவே கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். இதனிடையே இது குறித்து தனபால் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "'மாமன்னன்' படத்தினை நான் இன்னும் பார்க்கவில்லை, பார்த்தவர்கள் கூறினார்கள். நான் 1972ம்ஆண்டில் இருந்து இந்த அதிமுக கட்சியில் உள்ளேன். ஜெயலலிதா அம்மாவின் தீவிர விசுவாசி நான்" என்று கூறியுள்ளார். மேலும் அவர், " எனது சாயலில் இப்படம் அமைக்கப்பட்டிருந்தால் அது அம்மாவுக்கு கிடைத்த வெற்றி" என்றும் குறிப்பிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.