கஷ்டகாலத்தில் துணையாக நின்றாள்: மனைவி பற்றி பெருமையாக பேசிய லோகேஷ் கனகராஜ்
இயக்குனர் லோகேஷ் கனகராஜ், தன்னுடைய காதல் மனைவி குறித்து பெருமையாக பேசிய பேட்டி ஒன்றின் வீடியோ தற்போது இணையத்தில் ட்ரெண்ட் ஆகி வருகிறது. சிலர், "என்னது லோகேஷ்க்கு கல்யாணம் ஆயிடுச்சா?" என திகைக்க, வேறு சிலரோ, "மனைவி அமைவதெல்லாம் அவரவர் செய்த பாக்கியம்" என கமெண்ட் அடித்து வருகிறார்கள். இயக்குனர் லோகேஷ் கனகராஜிற்கு கடந்த 2012 ஆம் ஆண்டு, தனது காதலியான ஐஸ்வர்யாவுடன் திருமணம் நடந்தது. அப்போது இருவரின் சம்பாத்தியமும் இணைந்து மாதம், 70,000 வரை வந்த வேளையில், லோகேஷ் தன்னுடைய சினிமா ஆசையினால், வேலையை விட்டாராம். அதன் பின்னர் தனக்காகவும், குடும்பத்திற்காகவும், தன்னுடைய மனைவி, குழந்தை பிறந்த ஏழாவது மதத்திலிருந்து மீண்டும் வேலைக்கு செல்ல துவங்கி விட்டாராம்.
மனைவியை பற்றி பெருமையாக கூறும் லோகேஷ்
2017ஆம் ஆண்டு 'மாநகரம்' படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றாலும், 'லோகேஷ் கனகராஜ்' என்று அனைவராலும் அறியப்பட்டது என்னவோ, அவரின் இரண்டாம் படமான 'கைதி'க்கு பிறகு தான். கார்த்தி நடிப்பில் வெளியான அந்த படம், தமிழ் படத்துக்கான கமெர்ஷியல் மசாலா ஏதுமின்றி, விறுவிறுப்பான திரைக்கதை மற்றும் இயற்கையான சண்டைக்காட்சிகள் மட்டுமே நம்பி எடுக்கப்பட்டிருந்தது. இந்த படத்தின் வெற்றி, கார்த்தி மற்றும் லோகேஷின் சினிமா வாழக்கையில் மிக முக்கியமான திருப்புமுனை என்றே கூறலாம். அதன் பின்னர், லோகேஷ், விஜய் மற்றும் விஜய் சேதுபதியை வைத்து 'மாஸ்டர்' என்ற படம் இயக்கினார். 'கைதி' வெற்றியடைந்ததும், தன்னுடைய மனைவியை, வேலைக்கு செல்ல வேண்டாம் என்றும், வீட்டில் நிம்மதியாக ஒய்வு எடுக்கும்படி கூறிவிட்டதாகவும் லோகேஷ் அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.