மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் ஸ்பெஷல்: தமிழக முதல்வர் MK ஸ்டாலின் நடித்துள்ள திரைப்படங்கள் என்னவென்று தெரியுமா?
தமிழக முதல்வர், திமுக பொதுச்செயலாளருமான மு.க.ஸ்டாலின் ஒரு முக்கிய அரசியல் தலைவராக வருவதற்கு முன்பு, தன் தந்தை வழியில் அவரும் திரையுலகில் கால் பதித்துள்ளார் என தற்போது இருக்கும் இளைஞர்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஸ்டாலின் இது வரை இரண்டு திரைப்படங்களில் நடித்துள்ளார். 'மக்கள் ஆணை இட்டால்' மற்றும் 'ஒரே ரத்தம்' ஆகிய படங்களில் நடித்தார். மக்கள் ஆணை இட்டால் படத்தை ராமநாராயணன் இயக்கி இருந்தார். ஒரே ரத்தம் திரைப்படத்தை, தயாரிப்பாளர் கே ஸ்வர்ணம் இயக்கினார். சுவாரஸ்யமாக, வெளியான இந்த இரு படங்களின் கதையும், முன்னாள் தமிழக முதல்வரும், ஸ்டாலினின் தந்தையுமான மு.கருணாநிதி எழுதிய கதைகளை தழுவி எடுக்கப்பட்டது.
சின்னத்திரையிலும் நடித்த ஸ்டாலின்
'மக்கள் ஆணை இட்டால்' படத்தில் கேப்டன் விஜயகாந்த், ராதாரவி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படத்தில் இடம்பெற்ற, 'ஆற அமர' என்ற பாடலில் மு.க.ஸ்டாலின் நடித்திருப்பார். இந்தப் பாடலில், திமுக கொடியை ஏந்தியபடி, ஸ்டாலின் நடித்திருந்தார். 'ஒரே ரத்தம்' படத்தில், ராதாரவி,கார்த்திக்குடன் இணைந்து ஸ்டாலின் நடித்திருந்தார். இப்படத்தில் நந்தகுமார் என்ற கதாபாத்திரத்தில், ஸ்டாலின் நடித்தார். இந்த இரண்டு திரைப்படங்கள் தவிர, 'குறிஞ்சி மலர்' என்ற தொலைக்காட்சி தொடரிலும் ஸ்டாலின் நடித்துள்ளார். திராவிட இலட்சியங்களைக் கொண்ட இளம் கவிஞரான அரவிந்தன் என்ற கதாபாத்திரத்தில் ஸ்டாலின் நடித்திருந்தார். 80'களில் வெளியான இந்தத் தொடர், பெரும் வெற்றியடைந்தது. இருப்பினும், அவர் அதன் பிறகு நடிப்பு துறையில் ஈடுபாடு காட்டவில்லை, தீவிர அரசியலில் இறங்கினார்.