இசைக்குயில் ஆஷா போஸ்லே காலமானார்; நாளை மாலை அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு
செய்தி முன்னோட்டம்
இந்தியத் திரையிசையின் ஈடுஇணையற்ற குரலாகத் திகழ்ந்த பழம்பெரும் பாடகி ஆஷா போஸ்லே, தனது 92வது வயதில் ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 12) காலமானார். உடல்நலக்குறைவு காரணமாக மும்பையில் உள்ள ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், பல உறுப்புகள் செயலிழந்ததன் காரணமாக உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினர் மற்றும் மருத்துவர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். சனிக்கிழமை அன்று அதீத சோர்வு மற்றும் நெஞ்சுத் தொற்று காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி அவரது உயிர் பிரிந்தது. லெஜண்டரி பாடகி லதா மங்கேஷ்கரின் தங்கை ஆஷா போஸ்லேயின் மறைவு, இந்திய இசை உலகிற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகக் கருதப்படுகிறது.
இறுதிச் சடங்கு
இறுதிச்சடங்கு மற்றும் அஞ்சலி விபரங்கள்
ஆஷா போஸ்லேயின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக நாளை (திங்கட்கிழமை) காலை 11 மணி முதல் மதியம் 3 மணி வரை மும்பை லோயர் பரேலில் உள்ள அவரது இல்லமான காசா கிராண்டே வளாகத்தில் வைக்கப்படும் என்று அவரது மகன் ஆனந்த் போஸ்லே தெரிவித்துள்ளார். அதனைத் தொடர்ந்து, மாலை 4 மணி அளவில் மும்பை சிவாஜி பூங்காவில் உள்ள மயானத்தில் முழு அரசு மரியாதையுடன் அவரது இறுதிச்சடங்குகள் நடைபெறும் என்று மகாராஷ்டிர அமைச்சர் ஆஷிஷ் ஷெலார் அறிவித்துள்ளார். இசைத்துறையினர், அரசியல் தலைவர்கள் மற்றும் லட்சக்கணக்கான ரசிகர்கள் திரண்டு வந்து அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சாதனைகள்
எட்டு தசாப்த கால இசைப் பயணம் மற்றும் சாதனைகள்
எட்டு தசாப்தங்களுக்கும் மேலாக நீடித்த ஆஷா போஸ்லேயின் இசைப் பயணம் மலைக்க வைக்கும் சாதனைகளைக் கொண்டது. 12,000க்கும் மேற்பட்ட பாடல்களைப் பல்வேறு மொழிகளில் பதிவு செய்துள்ள அவர், தனது குரல் வளத்திற்காக 2011ஆம் ஆண்டு கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்திலும் இடம் பெற்றார். மீனா குமாரி முதல் காஜல், ஊர்மிளா மாடோண்ட்கர் வரை பல தலைமுறை நடிகைகளுக்கு அவர் பின்னணி பாடியுள்ளார். இந்தியாவின் பல்வேறு மொழிகளில் பாடியுள்ள அவர், தமிழில் ராமராஜன் படத்தின் செண்பகமே செண்பகமேவில் தொடங்கி பல்வேறு பாடல்களைப் பாடி முத்திரை பதித்துள்ளார். 2000 ஆம் ஆண்டில் தாதாசாஹேப் பால்கே விருதும், 2008 ஆம் ஆண்டில் பத்ம விபூஷன் விருதும் அவருக்கு வழங்கிக் கௌரவிக்கப்பட்டது.
இரங்கல்
இந்தியத் திரையுலகம் மற்றும் அரசியல் தலைவர்களின் இரங்கல்
ஆஷா போஸ்லேயின் மறைவுக்கு ஒட்டுமொத்த இந்தியாவும் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகிறது. மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "தலைமுறைகளைக் கடந்து நமது இதயங்களில் ஆட்சி செய்த ஒரு உன்னதமான பாடகியை நாம் இழந்துவிட்டோம். வங்காளத்திலும் அவர் மிகவும் பிரபலமானவர். 2018இல் அவருக்கு வங்காளத்தின் உயரிய விருதான 'பங்கபிபூஷன்' வழங்கி கௌரவித்தோம்" என்று உருக்கமாகப் பதிவிட்டுள்ளார். இதேபோல் மகாராஷ்டிர அமைச்சர்கள் மற்றும் பாலிவுட் நட்சத்திரங்கள் பலரும் அவரது மறைவு ஒரு சகாப்தத்தின் முடிவு என்று இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
அழியாத நினைவுகள்
இணையற்ற இசைக்குயிலின் என்றும் அழியாத நினைவுகள்
ஆஷா போஸ்லே வெறும் பாடகி மட்டுமல்ல, அவர் ஒரு மாபெரும் ஆளுமை. 90 வயதைக் கடந்த பிறகும் மேடையில் அவர் காட்டிய உற்சாகம் இளைய தலைமுறை கலைஞர்களுக்குப் பெரும் உத்வேகமாக அமைந்தது. தனது சகோதரி லதா மங்கேஷ்கருடன் இணைந்து இந்திய இசையை உலக உச்சிக்குக் கொண்டு சென்ற பெருமை இவருக்கு உண்டு. அவரது குரல் காற்றில் கரைந்தாலும், அவர் பாடிச் சென்ற ஆயிரக்கணக்கான பாடல்கள் என்றென்றும் இசை ரசிகர்களின் செவிகளில் ஒலித்துக் கொண்டே இருக்கும். இசைக்குயில் ஆஷா போஸ்லேயின் ஆன்மா சாந்தியடைய இறைவன் அருள்புரியட்டும்.