சர்வதேச திரைப்படத்தில் இசையமைப்பாளாராக அறிமுகமாகிறார் கதீஜா ரஹ்மான்
இந்தியா-பிரிட்டன் உள்ளிட்ட 2 நாடுகள் ஒன்றாக இணைந்து தயாரிக்கவுள்ள சர்வதேச திரைப்படம் 'லயனல்'(Lioness). இருநாடுகளின் திரைப்பட வளர்ச்சி கழகம் ஒன்றாக இணைந்து தயாரிக்கும் இப்படம் இரு பெண்களின் கதையினை மையமாக வைத்து எடுக்கப்படவுள்ளது என்று கூறப்படுகிறது. அதன்படி இப்படம் 1990ல் வாழும் புலம் பெயர்ந்த பெண்ணின் புனைவு கதை ஒரு பகுதியாகவும், சீக்கிய அரசின் கடைசி அரசரான துலீப் சிங் மகள் சோபியா துலீப் சிங் வாழ்க்கை வரலாறு மற்றொரு பகுதியாகவும் இப்படத்தில் படமாக்கப்படவுள்ளது. இந்த கதாபாத்திரங்களில் அதிதி ராவ் ஹைதரி மற்றும் பிரிட்டிஷ் நடிகையான பைஜ் சந்து நடிக்கிறார்கள். இப்படத்தினை பெண் இயக்குனரான கஜ்ரி பாபர் இயக்கவுள்ளார் என்று செய்திகள் தெரிவிக்கிறது.
கோவா சர்வதேச திரைப்பட விழாவில் வெளியான போஸ்டர்
தற்போது நடக்கும் கோவா சர்வதேச திரைப்பட விழாவில் இப்படத்தின் போஸ்டர் வெளியிடப்பட்டது. இந்நிலையில் இந்த சர்வதேச திரைப்படத்திற்கு இசையமைக்க கமிட்டாகியுள்ள கதீஜா ரஹ்மான் இந்நிகழ்ச்சியில் பங்கேற்று பேசினார். அவர் பேசுகையில், "லயனல் என்னும் இந்த சர்வதேச திரைப்படத்தில் வேலை பார்த்தது எனக்கு மிகப்பெரிய கௌரவம். அதேநேரம் இதில் பணிபுரிந்த தருணங்கள், சுவாரஸ்யம் மிகுந்த தருணங்களாக இருந்தது" என்று குறிப்பிட்டு பேசினார். மேலும் அவர், 'இப்படத்தின் கதையினை கேட்டதில் இருந்தே இதனுடன் பிணைக்கப்பட்டுவிட்டேன்' என்றும் கூறியுள்ளார். கடந்த 2020ம் ஆண்டு ஏஆர் ரஹ்மான் இசையமைத்து தயாரித்த 'ஃபரிஷ்தா' என்னும் பாடலை கதீஜா பாடியிருந்தார். அதனை தொடர்ந்து ஹலிதா ஷமீம் இயக்கத்தில் தமிழில் எடுக்கப்படும் 'மின்மினி' படத்தின் மூலம் இசையமைப்பாளராக கதீஜா தமிழ் திரையுலகிற்கு அறிமுகமாகவுள்ளார்.