21 ஆண்டுகளுக்குப் பிறகு தெலுங்கு சினிமாவில் கத்ரீனா கைப்? பிரபாஸின் ஸ்பிரிட் படத்தில் நடிக்கிறாரா?
செய்தி முன்னோட்டம்
அர்ஜுன் ரெட்டி, அனிமல் படங்களின் மூலம் இந்திய அளவில் கவனம் ஈர்த்த இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில், நடிகர் பிரபாஸ் நடித்து வரும் ஸ்பிரிட் திரைப்படத்தில் பாலிவுட் முன்னணி நடிகை கத்ரீனா கைப் சிறப்புத் தோற்றத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. போலீஸ் பின்னணியில் உருவாகி வரும் இத்திரைப்படத்தில் திரிப்தி திம்ரி கதாநாயகியாக நடிக்க, விவேக் ஓபராய் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அறிக்கைகளின்படி, படத்தில் வரும் மிக முக்கியக் கதாபாத்திரத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடிப்பதற்காக நடிகை கத்ரீனா கைப்பிடம் படக்குழுவினர் தீவிரப் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
உண்மை நிலை என்ன?
சினிமா வட்டாரம் அளித்த விளக்கம்
நடிகை கத்ரீனா கைப் - விக்கி கெளசல் தம்பதியினருக்கு கடந்த 8 மாதங்களுக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்த நிலையில், குழந்தையைப் பராமரிப்பதில் கவனம் செலுத்தி வந்த கத்ரீனா, தற்போது மீண்டும் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார்.
இந்நிலையில், இந்த செய்திகள் அனைத்தும் முற்றிலும் தவறானவை மற்றும் ஆதாரமற்றவை எனத் திரைப்படத் துறையைச் சேர்ந்த மூத்த நிர்வாகி ஒருவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
இது குறித்துப் பேசிய அவர், "கத்ரீனா கைப்பின் அடுத்தகட்ட நடிப்புத் திட்டங்கள் குறித்துப் பரப்பப்படும் செய்திகளில் எள்ளளவும் உண்மையோ அல்லது நம்பகத்தன்மையோ இல்லை.
முறையான உறுதிப்படுத்தல் இல்லாமல் முற்றிலும் யூகத்தின் அடிப்படையில் மட்டுமே இந்தத் தகவல்கள் பரப்பப்பட்டு வருகின்றன." எனத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.