நடிகர் அஜித்துடனான படத்தின் கதைக்களம் என்ன? இயக்குனர் சிறுத்தை சிவா கொடுத்த பதில் இதுதான்
செய்தி முன்னோட்டம்
சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான கங்குவா திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகி, வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் பெரும் பின்னடைவை சந்தித்தது. குறிப்பாக, சமூக வலைதளங்களில் இயக்குனர் சிவா கடுமையான விமர்சனங்களுக்கும் கேலிகளுக்கும் உள்ளானார். இந்த சூழலில், தனது அடுத்த திரைப்படத்திற்காக மீண்டும் நடிகர் அஜித்துடன் அவர் இணையவுள்ளது கோலிவுட் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது. வீரம், வேதாளம், விவேகம் மற்றும் விஸ்வாசம் என நடிகர் அஜித்துடன் ஏற்கனவே நான்கு வெற்றிப் படங்களைக் கொடுத்துள்ள சிவா, ஐந்தாவது முறையாக அவருடன் கை கோர்க்கிறார்.
கதைக்களம்
ரகசியம் காக்கப்படும் கதைக்களம்
அண்மையில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய சிவா, "அஜித் சாருடன் மீண்டும் இணைவது எப்போது என ரசிகர்கள் தொடர்ந்து கேட்கிறார்கள். அனைத்தும் சரியாக அமையும் போது அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும். தற்போது அந்தப் படத்தின் கதைக்களம் குறித்த விபரங்களை ரகசியமாக வைத்துள்ளோம்." என்று தெரிவித்துள்ளார். கங்குவா படத்தில் வரலாற்றுப் பின்னணியுடன் கூடிய அறிவியல் புனைகதையை கையாண்ட சிவா, அதில் ஏற்பட்ட சறுக்கல்களைச் சரிசெய்யும் விதமாக நடிகர் அஜித்தின் படத்தில் முற்றிலும் மாறுபட்ட ஒரு ஜானரைத் தேர்ந்தெடுக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. இதுவரை பார்த்த கிராமத்து அல்லது நகரத்து அதிரடி ஆக்ஷன் கதைகளைத் தாண்டி, சிவா ஒரு புதிய சோதனையில் ஈடுபட வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
எதிர்பார்ப்பு
ரசிகர்களின் எதிர்பார்ப்பு
கங்குவா படத்தின் தோல்விக்குப் பிறகு சிவா மீது ஒருவிதமான அழுத்தம் ஏற்பட்டுள்ளது. எனவே, அஜித்தின் நட்சத்திர அந்தஸ்திற்கு ஏற்றவாறு, அதே சமயம் விமர்சகர்களைத் திருப்திப்படுத்தும் வகையிலும் ஒரு வலுவான திரைக்கதையை அவர் உருவாக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அஜித் தற்போது கார் பந்தயத்தில் தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில், அங்கிருந்து வந்த பிறகு, புதிய படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.