Loading...
வெற்றிமாறன் - சிலம்பரசனின் 'அரசன்' ஷூட்டிங் அப்டேட்: தயாரிப்பாளர் தாணு பகிர்ந்த சுவாரஸ்யத் தகவல்கள்
'அரசன்' திரைப்படத்தின் அடுத்தகட்டப் படப்பிடிப்பு ஃபில்ம் சிட்டியில் நடைபெறவுள்ளது

வெற்றிமாறன் - சிலம்பரசனின் 'அரசன்' ஷூட்டிங் அப்டேட்: தயாரிப்பாளர் தாணு பகிர்ந்த சுவாரஸ்யத் தகவல்கள்

எழுதியவர் Venkatalakshmi V
Oct 22, 2026
12:22 pm

செய்தி முன்னோட்டம்

பிரபல தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு, சிலம்பரசன் (STR) மற்றும் வெற்றிமாறன் கூட்டணியில் உருவாகி வரும் 'அரசன்' திரைப்படத்தின் படப்பிடிப்பு நிலவரங்கள் குறித்து சுவாரஸ்யமான தகவல்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார். இயக்குநர் வெற்றிமாறனை நேரில் சந்தித்து பேசியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ள கலைப்புலி எஸ். தாணு, அடுத்தகட்டப் படப்பிடிப்பு ஃபில்ம் சிட்டியில் நடைபெறவுள்ளதாகத் தெரிவித்துள்ளார். தற்போதைய ஷெட்யூலிற்குப் பிறகு நடிகர் சிலம்பரசன் சிறிது காலம் ஓய்வெடுக்கவுள்ளதாகவும், அந்த இடைவெளியில் இயக்குநர் வெற்றிமாறன் தனது தனது அடுத்த படமான ராஜன் வகையறா படத்தின் பணிகளை கவனிக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இதனிடையே, வெற்றிமாறன் எப்போதுமே சினிமா சிந்தனையிலேயே இருப்பதாகவும், தான் அவரைச் சந்திக்கச் சென்றபோது அவர் எடிட்டிங் அறையில் 'அரசன்' படம் குறித்து விவாதித்துக் கொண்டிருந்ததாகவும் தாணு பாராட்டியுள்ளார்.

நினைவு

கடந்த கால நினைவுகளும் பரஸ்பர புரிதலும்

திரைப்படத் தயாரிப்பில் வெற்றிமாறனுடன் தனக்குள்ள அசைக்க முடியாத நட்பையும் புரிதலையும் தாணு நினைவுகூர்ந்தார்.

கொரோனா காலகட்டத்தில் 'விடுதலை' படத்தின் படப்பிடிப்பில் பல தடைகள் ஏற்பட்டதையும், அப்போது பல மொழிகளில் பிஸியாக நடித்துக்கொண்டிருந்த நடிகர் விஜய் சேதுபதி எந்தச் சிக்கலுமின்றி ஒத்துழைப்பு வழங்கியதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

அதேபோல், நடிகர் சூரி 'அண்ணாத்த' படத்தில் ரஜினிகாந்துடன் நடிக்க வாய்ப்பு கேட்டபோது, வெற்றிமாறன் உடனடியாக அதற்குச் சம்மதித்து அனுப்பி வைத்ததை தாணு நினைவு கூர்ந்தார்.

'விடுதலை' படத்திற்குப் பிறகு வெற்றிமாறன் தனக்குத் தர வேண்டிய சம்பளத்தில் ரூ. 3 கோடியை குறைக்க முன்வந்ததாகவும், ஆனால் அதற்கு தான் மறுத்துவிட்டு மீண்டும் அவருடன் இணைந்து பணியாற்ற விருப்பம் தெரிவித்ததாகவும் அவர்களின் நெருக்கமான உறவை வெளிப்படுத்தினார்.

ADVERTISEMENT