
அமெரிக்க நிறுவனத்துடன் புதிய ஒப்பந்தத்தை கையெழுத்திட்டது ஜியோ சினிமா!
செய்தி முன்னோட்டம்
இந்தியாவில் ஃபிபா கால்பந்து உலகக்கோப்பை மற்றும் ஐபிஎல் 2023 சீசனின் டிஜிட்டல் உரிமத்தை கைப்பற்றி ஓடிடி போட்டியில் கால் பதித்தது ஜியோ சினிமா.
மேற்கூறிய இரண்டு விளையாட்டுத் தொடர்களையும் இலவசமாக ஒளிபரப்பியதன் மூலம் இந்தியாவில் புதிய வாடிக்கையாளர்களைக் கைப்பற்றியதுடன், இந்தியாவில் தன்னுடைய வருகையையும் இருப்பையும் பதிவு செய்தது ஜியோ சினிமா.
இந்த விளையாட்டுத் தொடர்கள் மூலம் கைப்பற்றிய புதிய வாடிக்கையாளர்களை இழக்காமல் இருக்க, மேலும் புதிய வாடிக்கையாளர்களை தங்களது சேவையை நோக்கி இழுக்க HBO மற்றும் வார்னர் பிரதர்கஸின் உள்ளடக்கங்களை தன்னுடைய சேவைத்தளத்திற்குள் கொண்டு வந்தது அந்நிறுவனம்.
மேலும், வார்னர் பிரதர்ஸின் உள்ளடக்கங்கள் தங்களுடைய தளத்தில் மட்டுமே இருப்பதை உறுதி செய்யும் வகையில் தனித்துவ ஒப்பந்தம் ஒன்றையும் செய்து கொண்டது ஜியோ சினிமா.
ஜியோசினிமா
புதிய ஒப்பந்தம்:
இதனைத் தொடர்ந்து தற்போது அமெரிக்காவின் NBC யுனிவர்சல் நிறுவனத்துடனும் புதிய ஒப்பந்தம் ஒன்றை செய்திருக்கிறது ஜியோ.
அதன்படி NBC யுனிவர்சல் மற்றும் அதன் துணை நிறுவனமான பீகாக்கின் உள்ளடக்கங்களை தங்களுடைய ப்ரீமியம் சேவையில் வழங்கவிருக்கிறது ஜியோசினிமா.
HBO மற்றும் வார்னர் பிரதர்ஸ் உள்ளிட்ட வெளிநாட்டு உள்ளடக்கங்களை தங்களுடை ப்ரீமியம் சேவையில் இந்த மாதத் தொடக்கத்தில் வழங்கத் தொடங்கியது அந்நிறுவனம். ரூ.999 விலையில் ஒரு வருட ப்ரீமியம் சேவைக்கு பயனர்கள் சந்தா செய்து கொள்ள முடியும்.
பாஸ்ட் எக்ஸ், சூப்பர் மேரியோ பிரதர்ஸ் திரைப்படம் மற்றும் ஜூன் மாதம் வெளியாகவிருக்கும் கிரிஸ்டோபர் நோலனின் ஓப்பன்ஹெய்மர் உள்ளிட்ட திரைப்படங்களும் ஜியோசினிமா தளத்தில் வெளியாகவிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.