ஜன நாயகன் vs சென்சார் போர்டு வழக்கு அப்டேட்: ஜனவரி 27ஆம் தேதி தீர்ப்பு வெளியாகுமாம்!
செய்தி முன்னோட்டம்
நடிகர் விஜய்யின் கடைசி திரைப்படமாக எதிர்பார்க்கப்படும் 'ஜன நாயகன்' படத்தின் தணிக்கை விவகாரத்தில், சென்சார் போர்டின்(CBFC) மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பு வெளியாகும் தேதி தற்போது தெரியவந்துள்ளது. தி ஹிந்து வெளியிட்டுள்ள செய்தியின்படி, இந்த வழக்கின் தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் வரும் ஜனவரி 27ஆம் தேதி அன்று தெரிவிக்கவுள்ளது. இந்த மேல்முறையீடு மனுவை தலைமை நீதிபதி அடங்கிய இரு நீதிபதிகள் அமர்வு விசாரித்து, தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்திருந்தது. இந்த நிலையில் தான் தீர்ப்பு தேதி வெளியாகியுள்ளது.
பின்னணி
ஜன நாயகன் vs CBFC வழக்கின் பின்னணி
முன்னதாக ஜன நாயகன் படத்திற்கு 'U/A 16+' சான்றிதழ் வழங்கத் தணிக்கை வாரியத்தின் தேர்வுக் குழு பரிந்துரைத்திருந்தது. ஆனால் வெளியீட்டு தேதி நெருங்கும் நேரத்தில், திடீரென அந்த முடிவை நிறுத்தி வைத்த தணிக்கை வாரியத் தலைவர், படத்தை மறுஆய்வுக் குழுவின் (Revising Committee) பார்வைக்கு அனுப்ப உத்தரவிட்டார். இதை எதிர்த்து தயாரிப்பு நிறுவனம் தொடர்ந்த வழக்கில், தனி நீதிபதி பி.டி. ஆஷா, தணிக்கை வாரியத்தின் உத்தரவை ரத்து செய்து, உடனடியாக சான்றிதழ் வழங்க ஆணையிட்டார். தனி நீதிபதியின் இந்த உத்தரவை எதிர்த்து மத்திய திரைப்படத் தணிக்கை வாரியம் (CBFC) உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.
வாதம்
வாதமும், CBFC கோரும் காட்சி நீக்கங்களும்
படத்தைப் பார்த்த ஐந்து பேர் கொண்ட தேர்வுக் குழுவில், ஒரு உறுப்பினர் அளித்த புகாரின் அடிப்படையில் படம் மறுஆய்வுக்கு அனுப்பப்பட்டதாக CBFC தரப்பில் தெரிவிக்கப்பட்டது. படத்தில் ராணுவ நடவடிக்கை மற்றும் அவர்கள் சார்ந்த சில காட்சிகள் "யதார்த்தத்திற்கு புறம்பாக" இருப்பதாகவும், அவை அண்டை நாடுகளுடனான உறவை பாதிக்கக்கூடும் என்றும் தணிக்கை வாரியம் கருதுகிறது. ராணுவத்தினரை சித்தரிக்கும் போது உரிய அனுமதி பெற வேண்டும் என புகார் தெரிவித்த தணிக்கை நபர் கூறியதாக செய்திகள் கூறின. ஆனால், தேர்வு குழு ஏற்கனவே ஒருமனதாக சான்றிதழ் வழங்க பரிந்துரைத்த நிலையில், மீண்டும் ஒரு உறுப்பினர் புகார் அளிப்பது உள்நோக்கம் கொண்டது என தயாரிப்பு நிறுவனம் வாதிட்டது.