"3000 கோடியை முதலீடு செய்கிறேன்" - KGF தயாரிப்பு நிறுவனத்தின் மெகா அறிவிப்பு
கன்னட திரையுலகில் மிகவும் பிரபலமான தயாரிப்பு நிறுவனம், ஹோம்பலே பிலிம்ஸ். இந்த நிறுவனம் கே.ஜி.எஃப்-1 மற்றும் 2, காந்தாரா போன்ற ஹிட் படங்களை தயாரித்து, பான் இந்திய தயாரிப்பு நிறுவனமாக அவதாரம் எடுத்துள்ளது. இந்நிறுவனம் தற்போது பிரபாஸ் மற்றும் ஸ்ருதிஹாசன் நடிப்பில் 'சலார்' படத்தை தயாரித்து வருகிறது. இப்படத்தை இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்குகிறார். இதையடுத்து கீர்த்தி சுரேஷ் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கும் ரகு தாத்தா என்ற படத்தையும் தயாரித்து வருகிறது. மேலும் பிரித்விராஜின் நடிப்பில் டைசன் எனும் படத்தையும், ரக்ஷித் ஷெட்டி இயக்கத்தில் ரிச்சர்ட் ஆண்டனி எனும் படத்தையும் தயாரித்து வருகிறது. இந்நிலையில் ஹோம்பலே பிலிம்ஸ் உரிமையாளரான விஜய் கிரகந்தூர் புத்தாண்டு வாழ்த்தை தெரிவித்துள்ளனர்.
ஹோம்பலே பிலிம்ஸ் நிறுவனம் வெளியிட்ட ட்விட்டர் பதிவு
ஹோம்பலே பிலிம்ஸ் நிறுவனம், அவர்களின் எதிர்கால திட்டத்தை பற்றி ஓர் அறிவிப்பை இந்த சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையில் "சினிமா என்பது பழங்காலத்திலிருந்தே எல்லோராலும் பார்க்கப்பட்டு மற்றும் பாராட்டப்பட்டு மக்களோடு இணைந்து வருகிறது. நம் வாழ்க்கையில் கஷ்டமான நேரங்களில் இருந்து விடுபட சினிமா பெரிய பங்கு வகிக்கிறது. மேலும் பன்முகத்தன்மையுள்ள இந்தியா, இளைஞர்களிடம் இருக்கும் திறமையை வெளிக்கொணர சினிமா ஒரு பரந்த வாய்ப்பிணை நமக்கு வழங்குகிறது. இந்த வருடம் அழியாத தாக்கத்தை ஏற்படுத்தும் அழுத்தமான படங்களை தயாரிக்க உறுதி அளிக்கிறோம். இந்த ஆர்வத்தை மனதில் வைத்து, பொழுதுபோக்கு துறையின் நிலையான வளர்ச்சிக்காக வருகிற ஐந்து ஆண்டுகளில் ரூ.3000 கோடியை முதலீடு செய்வதாக உறுதி அளிக்கிறோம் " என தெரிவித்துள்ளது.