மறக்க முடியாத காம்போ! 37 வருடம் கழித்து ரிலீஸ் ஆகாத ரஜினியின் பழைய ஹிந்தி படம் ரிலீஸ்!
செய்தி முன்னோட்டம்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், பாலிவுட்டின் ஹேமமாலினி மற்றும் சத்ருகன் சின்ஹா ஆகியோர் நடிப்பில் 1989 ஆம் ஆண்டு உருவான திரைப்படம் ஹம் மேய்ன் ஷாஹென்ஷா கோன். பல்வேறு காரணங்களால் முடக்கப்பட்டிருந்த இந்தப் படம், சுமார் 37 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது நாடு முழுவதும் திரையரங்குகளில் வெளியாகத் தயாராகிவிட்டது. ராஜா ராய் பிலிம்ஸ் தயாரிப்பில், ஹர்மேஷ் மல்ஹோத்ரா இயக்கத்தில் உருவான இந்த மல்டி-ஸ்டாரர் திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுப்பொலிவு
நவீனத் தொழில்நுட்பத்தில் புதுப்பொலிவு
அக்காலத்தில் 35 மிமீ ஈஸ்டர்ன் கலர் ஸ்டாக்கில் படமாக்கப்பட்ட இந்த திரைப்படம், இன்றைய காலத் தொழில்நுட்பத்திற்கு ஏற்ப மெருகேற்றப்பட்டுள்ளது. படத்தின் அசல் தன்மையை மாற்றாமல், அதே சமயம் நவீனத் திரை அனுபவத்தைத் தரும் வகையில் கீழ்க்கண்ட மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன: ஏஐ மறுசீரமைப்பு: செயற்கை நுண்ணறிவு (ஏஐ) மூலம் காட்சிகள் சரிசெய்யப்பட்டுள்ளன. 4கே தரம்: முழுப் படமும் 4கே தரத்திற்கு (4K Remastering) மாற்றப்பட்டுள்ளது. ஆடியோ அப்டேட்: 5.1 சரவுண்ட் சவுண்ட் முறையில் ஒலியமைப்பு மேம்படுத்தப்பட்டுள்ளது.
ஜாம்பவான்கள்
ஜாம்பவான்களின் சங்கமம்
இந்தப் படம் பல பழம்பெரும் கலைஞர்களின் உழைப்பில் உருவானது. சலீம்-பைஸ் வசனங்களை எழுத, லக்ஷ்மிகாந்த்-பியாரேலால் இசையமைத்துள்ளனர். ஆனந்த் பக்ஷி பாடல்களை எழுத, மறைந்த நடன இயக்குனர் சரோஜ் கான் நடனம் அமைத்துள்ளார். இதில் ரஜினிகாந்த், ஹேமமாலினி தவிர அனிதா ராஜ், பிரேம் சோப்ரா மற்றும் மறைந்த நடிகர்களான அம்ரிஷ் பூரி, ஜகதீப் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
அப்டேட்
ஜெயிலர் 2 அப்டேட்
ஒருபுறம் பழைய படம் ரிலீசுக்குத் தயாராகும் நிலையில், மறுபுறம் ரஜினிகாந்தின் ஜெயிலர் 2 திரைப்படமும் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, மோகன்லால், சிவராஜ்குமார் மற்றும் எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட நட்சத்திரப் பட்டாளத்துடன் உருவாகும் இந்தப் படம் ஜூன் 2026 இல் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பழைய ரஜினியையும் புதிய ரஜினியையும் ஒரே ஆண்டில் திரையில் பார்ப்பது ரசிகர்களுக்கு இரட்டை விருந்தாக அமையும்.